Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க. வலையில் சிக்குவாரா "வைகைப் புயல்"?  அரசியலா? சினிமாவா? குழப்பத்தில் வடிவேலு

அக்டோபர் 20, 2020 10:28

சென்னை: தமிழகத்தில் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவை பா.ஜ.க. இழுத்து வரும் நிலையில் அவர் அரசியல் தேவையா? சினிமா தேவையா? என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இவர் பா.ஜ.க. வலையில் சிக்குவாரா? என்பதே அனைவரின் கேள்விக்குறியாக உள்ளது,.
நடிகர் வடிவேலுவை பா.ஜ.க.வில் இணைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது அக்கட்சியின் தமிழக தலைமை. ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் பா.ஜ.க.வில் ஐக்கியமாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து ஆட்களை இழுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

பா.ஜ.க.வின் அழைப்பு தொடர்பாக நடிகர் வடிவேலு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அரசியலா? சினிமாவா? என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் வடிவேலு. அவரது நகைச்சுவைக் காட்சிகள் ஒளிக்காத வீடுகள் இல்லை என்று கூட சொல்லலாம். இதென்ன சின்னப்புள்ள தனமா இருக்கு. ஹைய்யோ..ஹைய்யோ.. சண்டையில் கிழியாத சட்டை எங்கிருக்கு, போங்க தம்பி... உள்ளிட்ட அவர் பேசிய பல வசனங்கள் எத்தகைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருந்து வருகிறது.

இப்படி பல பெருமைகளுடைய வடிவேலுவை பா.ஜ.க.வில் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் வடிவேலுவை பிரச்சார பீரங்கியாக களமிறக்கும் திட்டத்தில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அதற்கான முன்னெடுப்புகளை 70 சதவீதம் வரை முடித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் கரையும் என்பது போல் அரசியலே வேண்டாம் என்றிருந்த வடிவேலு இப்போது இது குறித்து தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து அந்தக் கட்சிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் தி.மு.க. வெற்றிபெறாததால் அவரது சினிமா பாதையே தடம்புரண்டது. 2011-ம் ஆண்டுக்கு முன் இருந்த பரபரப்பும் பிஸியும் வடிவேலுவிடம் இல்லை. பெயருக்கு ஒன்றிரண்டு படங்களில் நடிக்கச் செய்தார். அரசியல் முத்திரை வந்துவிட்டதால் அவரை நடிக்க வைக்க இயக்குநர்கள் பலரும் தயங்கினர்.

இந்நிலையில் மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் அழைப்புகள் வடிவேலுவை நோக்கி வந்துள்ளது. கங்கை அமரன், ராதாரவி, சுரேஷ், குட்டி பத்மினி, கவுதமி, நமீதா, குஷ்பு, இயக்குநர் பேரரசு என ஏற்கனவே பா.ஜ.க.வில் சினிமா பிரபலங்கள் பலர் ஐக்கியமாகியுள்ள நிலையில் அந்த வரிசையில் வடிவேலுவும் விரைவில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும்? அல்லது ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. புதிதாக பா.ஜ.க. வைகைப்புயல் வடிவேலுக்கு வலைவீசியுள்ளது. இதில் அவர் சிக்குவாரா? சிக்கினால் அவரது திரையுலக பயணம் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தலைப்புச்செய்திகள்