Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சி.டி. ஸ்கேன் மூலம் கொரோனா நோய் தொற்றை கண்டறிய முடியாது: சுகாதாரத்துறைச் செயலாளர்

அக்டோபர் 22, 2020 07:48

சென்னை: சி.டி. ஸ்கேன் மூலம் கொரோனா நோய் தொற்றை கண்டறிய முடியாது,' என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருவது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை விட குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவைப் போல் அடுத்த அச்சுறுத்தலாக டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவிவருகிறது.

தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நடமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்த போது தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் சேலம் அரசு மருத்துவமனை உள்பட சில அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லைகள் இருந்தன. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அந்தந்த அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 1,800 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு மழைக்கால தொற்று நோய்கள் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இருப்பினும், வடகிழக்கு பருவமழை இனிமேல்தான் தொடங்கவுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்புள்ளதோ என பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முககவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம். இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக வளாகம் ஒன்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 நிமிடங்கள் பொது மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும். கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். மட்டுமே சிறந்த பரிசோதனை முறை. சி.டி. ஸ்கேன் மூலம் கொரோனா நோய் தொற்றை கண்டறிய முடியாது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்