Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்

அக்டோபர் 23, 2020 07:10

புதுடெல்லி: இமயமலைத் தொடரை 8 ரிக்டர் அளவுக்கும் மேலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கப்போவதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இமயமலைத் தொடர் முழுவதையும் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கப்போவதாக ஆய்வு மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவு 8 அல்லது அதற்கு மேல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரை தாக்கவிருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வளவு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாம் முன்னெப்போதும் பார்த்திராத அளவுக்கு உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு நிகரான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை இமயமலைத் தொடர் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ட்ராடிகிராஃப், மணல், ரேடியோகார்பன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் தொடங்கி பாகிஸ்தான் வரை நீளும் இமயமலைத்தொடர் கடந்த காலத்தில் மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு மூலக் காரணமாக இருந்ததாக ஆய்வுக் குழுவை சேர்ந்த ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இமயமலைத் தொடரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்தும் இந்த ஆய்வில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்து வரும் நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கம் எவ்வளவு ஆண்டுகளில் ஏற்படும் என்பதை கணிக்க முடியாது? என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலைத் தொடரை ஒட்டி இந்தியாவில் சண்டிகர், டேராடூன், நேபாளத்தில் காத்மாண்டு போன்ற பெரு நகரங்கள் இருக்கின்றன. இந்நகரங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், இமயமலைத் தொடரில் ஏற்படும் வலுவான நிலநடுக்கங்களால் டெல்லி வரை நடுக்கம் ஏற்படும்.

இவ்வாறு ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்