Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை-தமிழக  ஆளுநர் விளக்கம் 

அக்டோபர் 23, 2020 10:03

சென்னை: நீட் முன்னுரிமை அடிப்படையில்  7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. அரசுடன்  7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்காக இணைந்து தி.மு.க. போராட தயார் என ஆளுநருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஆளுநர் கூறுகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்களுக்கு கால அவகாசம் தேவை. என்னை சந்தித்த அமைச்சர்களிடமும் 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என குறிப்பிட்டிருந்தேன். நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்து அனைத்து கோணங்களில் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என ஆளுநர் பதில் கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தி.மு.க. தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார் என மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்