Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரங்களில் உலாவும் நாய்கள்

அக்டோபர் 23, 2020 10:12

விருதுநகர்: ராஜாபாளையம் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி திரிவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டவுனில் அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பிரசவம் முதல் நிறைமாத கர்ப்பிணிகள் வரை சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பகலிலும், இரவிலும் மருத்துவமனை வளாகத்திற்கு அருகே நாய்கள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நோயாளிகளின் உடன் வரும் பெண்கள், ஆண்கள் தங்களது குழந்தைகளுடன் தூங்கும் போது நாய்கள் கடித்து விடுமோ? என அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் கண்மணி காதர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து எண்ணற்ற பேர் வருகின்றனர். இந்தநிலையில் இங்கு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் தான் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தூங்குகின்றனர்.

அவ்வாறு தூங்கும் போது நாய்கள் எதுவும் கடித்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
 

தலைப்புச்செய்திகள்