Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

அக்டோபர் 24, 2020 06:13

மதுரை: எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 பேராக உயர்ந்துள்ளது. ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த போது, நேற்றுமுன்தினம் பிற்பகல் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம், விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய், காளீஸ்வரி உள்ளிட்ட 5 பெண்கள் உடல் கருகி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் நேற்று அதிகாலையில் உயிரிழந்தனர். இதன் மூலம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

சம்பவ இடத்தில் மதுரை டி.ஐ.ஜி. ராஜேந்திரன், பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். லாக்டவுன் விதிகளை மீறி 37 பேர் பணிபுரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், காலை 10.30 மணிக்கு மேல் மணி மருந்தை பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்