Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தில் 3 முத்தான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

அக்டோபர் 24, 2020 06:54

புதுடெல்லி: குஜராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூர்யோதய் யோஜனா'வை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் 9 மணி வரை மின்சார விநியோகம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுக்குள் மின் விநியோக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ரூ. 3,500 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.  யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

ரூ. 470 கோடி செலவில் யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவடையும் போது, படுக்கைகளின் எண்ணிக்கை 450-இல் இருந்து 1251 ஆக அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையமாகவும், உலகின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையங்களில் ஒன்றாகவும் இந்த நிறுவனம் உருவாகும்.

அறுவை சிகிச்சை அரங்கத்துடன் கூடிய இந்தியாவின் முதல் நடமாடும் முன்னேறிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு இந்த மையத்தில் இருக்கிறது. சுவாசக் கருவிகள், ஐஏபிப்பி, ஹீமோடையாலிசிஸ், எக்மோ உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. 14 அறுவை சிகிச்சை அரங்கங்கள், 7 இருதய காத்தெடரைசேஷன் ஆய்வகங்கள் இந்த நிறுவனத்தில் தொடங்கப்படும்.

மேலும் தொலைதூர இருதய மருத்துவத்துக்கான கைபேசி செயலியை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இதன்மூலம் இருதய சிகிச்சைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மாறும்.

மூன்றாவதாக, கிர்னாரில் ரோப்வே சேவையை அவர் திறந்து வைக்கிறார். ரோப்வேவை பிரதமர் திறந்து வைப்பதன் மூலம் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் கிர்னார் மீண்டும்  இடம் பெறும். ஆரம்பத்தில் ஒரு பெட்டியில் எட்டு நபர்களுக்கான கொள்ளளவுடன் 25-30 பெட்டிகள் இருக்கும். இதன்மூலம் 2.3 கிமீ தூரத்தை வெறும் 7.5 நிமிடங்களில் அடைய முடியும். கிர்னார் மலையைச் சுற்றியுள்ள பசுமையான இயற்கை அழகை இந்த ரோப்வேயில் செல்வதன் மூலம் ரசிக்க முடியும்.
 

தலைப்புச்செய்திகள்