Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையிலிருந்து தஞ்சாவூர், திருச்சி கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

அக்டோபர் 24, 2020 07:23

சென்னை: தீபாவளி, புத்தாண்டு, தை திருநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கடும் கட்டுப்பாடுகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரிசர்வேசன் செய்பவர்களுக்கு மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் வண்டி எண்: 06866 இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ம் தேதி முதல், தஞ்சாவூரில் இருந்து தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27ம் தேதி முதல், தினசரி எழும்பூரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும். எழும்பூர்-கொல்லம் வண்டி எண் 06101 இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று 25ம் தேதி முதல், மாலை 5 மணிக்கு தினசரி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கமாக கொல்லம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ம்தேதி முதல், தினசரி மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27ம் தேதி முதல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ம் தேதி முதல், தினசரி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை: 
திருச்சியிலிருந்து அக்டோபர் 26ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 4.15க்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். அங்கிருந்து 27ம் தேதி இரவு 11.15க்கு புறப்படும் ரயில் அடுத்த 28ம் தேதி காலை 4.45க்கு திருச்சிக்கு வரும். இந்த ரயிலானது மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தஞ்சாவூரிலிருந்து 26ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரை அடுத்தநாள் அதிகாலை 4.30க்கு சென்றடையும். எழும்பூரில் இருந்து இரவு 10.55க்கு புறப்படும் ரயில் அடுத்தநாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூருக்கு வரும். 

இந்த ரயில், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குற்றாலம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் மற்றும் சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூரிலிருந்து இன்று 25ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 26ம் தேதி காலை 8.45க்கு கொல்லத்தைச் சென்றடையும். அங்கிருந்து அக்டோபர் 26ல் புறப்படும் ரயில் சென்னை எழும்பூரை பிற்பகல் 3.05க்கு சென்றடையும். இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புன்னலூா், அவனேஸ்வரம், கொட்டரகரா, குண்டரா மற்றும் சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்