Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆயுத பூஜை கொண்டாட்டம் எதிரொலி! திருச்சியில் வாழைத்தார் விலை அதிகரிப்பு

அக்டோபர் 24, 2020 07:25

திருச்சி: திருச்சி காந்தி சந்தை வாழை மண்டியில் ஆயுத பூஜை கொண்டாட்டம் காரணமாக வாழைத்தார் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதுதொடர்பான பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. திருச்சி காந்திசந்தைக்கு ஆயுத பூஜையையொட்டி வாழை மண்டிக்கு வாழைத்தார் வரத்து கடந்த 2 நாள்களாக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தின் பிரதான வாழை மண்டி சந்தையாக உள்ளது காந்தி சந்தை. இங்கு திருச்சி, குளித்தலை, தொட்டியம், முசிறி, லால்குடி, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூா், சத்தியமங்கலம், தேனி, திண்டுக்கல், சேலம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வாழைத்தார் ஏலத்துக்கு வரும்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை வாகனங்கள் மூலம் இந்தச் சந்தைக்கு கொண்டு வருவா். இந்த வாழைத்தார்களை ஏலம் விட்டு அதற்கான தொகையை கமிஷனைக் கழித்துக் கொண்டு விவசாயிகளுக்கு வழங்குவது வாழை மண்டி வியாபாரிகளின் பணியாகும். பல்வேறு பகுதிகளில் கொண்டுவரப்படும் வாழைத்தார்கள் இங்கு மாலையில் ஏலம் விடப்படும். இங்கு 15-க்கும் மேற்பட்ட ஏல விற்பனை மண்டிகள் உள்ளன. ஏலத்தில் பங்கேற்க திருச்சி, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, விராலிமலை, துவரங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்தச் சந்தையில் பூவன், செவ்வாழை, பச்சை வாழைத்தார்களே அதிகம் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். ஆயுத பூஜைக்காக வழக்கத்தைவிட இருமடங்கு வாழைத்தார்கள் வந்துள்ளன. ஒவ்வொரு மண்டியிலும் வழக்கத்தைவிட இருமடங்காக வாழைத்தார்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. கடந்த வாரம் வாழைத்தார் ஒன்று ரூ.250 முதல் ரூ.500 வரை ஏலம் போன நிலையில், தற்போது ரூ.350 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடா்பாக, காந்திசந்தையில் வாழை ஏல மண்டி வைத்துள்ளவர்கள் கூறியதாவது:

ஆயுத பூஜையை முன்னிட்டு வியாழன், வெள்ளி என இரு நாள்களும் மொத்த விற்பனை இடமான வாழைத்தார் ஏல மண்டிக்கு வரத்து அதிகமாக உள்ளது. பூவன்தார் ஒன்றுக்கு ரூ.450 விலை கிடைக்கிறது. செவ்வாழைக்கு ரூ.600, பச்சை வாழைக்கு ரூ.350 வரை விலை கிடைக்கிறது. அனைத்து இடங்களிலும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதால் வாழைப்பழம் அதிகம் தேவையிருக்கும். இதைக் கருத்தில் கொண்டே விவசாயிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்களை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனா்.
இவ்வாறு அவர்கள் கூறினார். 

தலைப்புச்செய்திகள்