Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூருவில் வெள்ளநீரில் 200 வீடுகள் மிதப்பு: உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

அக்டோபர் 25, 2020 06:55

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒசகெரேஹெள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் காற்றில் மிதக்கின்றன. இந்த வெள்ள நீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் காலை முதலே பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாலை 5 மணி அளவில் கருமேகங்கள் ஒன்றுகூடி மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல, செல்ல வெளுத்து வாங்கியது. குறிப்பாக மைசூரு சாலை, ஒசகெரேஹள்ளி, கோரமங்களா, பீனியா, பனசங்கரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இரவு முழுவதும் விடாமல் பெய்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிக்குள் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒசகெரேஹள்ளி பகுதியில் ஓடும் ராஜகால்வாயில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளநீர் அங்கிருந்த 200 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பழமைவாய்ந்த கவிசித்தேஸ்வரா கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஒசகெரேஹள்ளியில் உள்ள பிரசித்தி பெற்ற தத்தாத்ரேயா கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. கருவறைக்குள் புகுந்த மழைநீரால் சாமி சிலைகள் மூழ்கின. 6 முதல் 8 அடி வரை மழைநீர் தேங்கி நின்றது. கோயிலில் உள்ள சாமி புகைப்படங்களும் தண்ணீரில் மூழ்கின.

இதையடுத்து அந்த கோவிலில் இருந்த சாமி சிலைகள், புகைப்படங்கள், சாமிக்கு அணிவிக்கும் ஆபரணங்கள், துணிகள் எல்லாம் பத்திரமாக எடுத்து செல்லப்பட்டு அருகே இருந்த பத்மாவதி மீனாட்சி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது தத்தாத்ரேயா கோவிலை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கிருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் நேற்று முன் தினம் இரவு உணவில்லாமல் அப்பகுதி மக்கள் பட்டினியாக இருந்தனர். மழையில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களும் மீட்கப்பட்டன. மழைநீரில் தத்தளித்த மக்கள் கிடைத்த பொருட்களை கையில்பிடித்தபடி மிதந்து சென்று தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்