Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் விருப்பமும், அரசியல்வாதிகள் தந்திரமும்

மார்ச் 26, 2019 05:28

லோக்சபா: லோக்சபா தேர்தலை, நாடு சந்திக்க உள்ள நிலையில், பொதுமக்களின் கவனம் முழுவதும், அரசியலின் பக்கம் திரும்பி உள்ளது. மக்கள், தங்கள் பிரச்னைகளில் இருந்து விலகி, 'தேர்தல் என்பது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும், பிரமாண்ட திருவிழா' என, கருதும் வகையில், திசை திருப்பப்படுகின்றனர். 

தேர்தலில் வேட்பாளராகும் வாய்ப்பு, பணம் படைத்தோர், வாரிசுகள், கட்சியின் உண்மையான தொண்டர்கள் என, இவர்களில் யாருக்கு கிடைக்கிறது; பெண்களுக்கு போதிய வாய்ப்பு தரப்படுகிறதா; அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவா; புதிதாக அறிவித்த இலவச திட்டங்கள் என்ன என்பவை பற்றி, பொதுமக்களும், ஊடகங்களும் விவாதிக்கின்றன. அதேபோல, தேர்தலில் பணக்காரர்களின் மறைமுக முதலீடு, ஊழல், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா, பொருந்தா கூட்டணி என, ஜனநாயகத்தின் அடிப்படைகளை ஆட்டம் காணச் செய்யும், பல கருத்துக்கள் குறித்த விவாதங்களும் தேவை தான். 


உண்மை நிலை என்ன? 
ஆனால், சாதாரண மக்களின் வாழ்வியலுக்கு தேவையான பிரச்னைகள் அலசப்படுவதில்லை என்பதே உண்மை. அவர்களின் நியாயமான விருப்பங்கள், வாழ்க்கை தேவைகள் பற்றி, இங்கே விவாதிக்கப்படுவது இல்லை. அவர்களுக்கு தெரியாமலேயே, அவர்களின் விருப்ப பட்டியலில், மதுவும், புகை பொருட்களும் இடம் பிடித்து விடுகின்றன. மக்கள் தங்கள் விருப்பங்களை பற்றி பேசாவிட்டாலும், தேர்தல் நேரத்தில், அரசியல்வாதிகள், அவர்களின் விருப்பங்களை எல்லாம், மூளைச் சலவை செய்து, மக்களிடம் புகுத்தி விடுவர்; புகுத்தியும் வருகின்றனர். 

நாட்டில் அதிகம் பேர் விவசாயிகளாக உள்ளனர்; அவர்களின் விருப்பம் இது தான்: நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும். கூலி விவசாயிகளுக்கு, காணி நிலமாவது வேண்டும். விளை பொருட்களின் விலையை, விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும். இடுபொருள் செலவை குறைத்து, இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும். பெரிய அறக்கட்டளைகளால் முடக்கப்பட்டோ, முறையாக பராமரிக்கப் படாமலோ உள்ள கோவில் நிலங்களை மீட்டு, ஏழை கூலிகளுக்கு, விவசாயம் செய்ய வழங்க வேண்டும். சீனாவை போல, நிலமற்ற கூலி விவசாய முறை ஒழிக்கப்பட வேண்டும். 

ஒரு குடும்பத்தினர், அதிகபட்சம், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் வகையில், சட்ட திருத்தம் வேண்டும். இது விவசாயிகள் விருப்பம். ஆனால், அரசியல்வாதிகளும், ஆள்வோரும், விரும்புவது என்ன... நிலம், 45 ஏக்கர் வைத்திக்கும் விவசாயிகளை தேடிப்பிடித்து, பண்ணை முறை விவசாயம் வாயிலாக, உற்பத்தியைப் பெருக்கி, உணவு தன்னிறைவு பெற்ற நாடாக்க வேண்டும். உணவு உற்பத்திக்கு, நவீன விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். கூலி விவசாயிகளுக்கு, நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை. 

150 நாட்கள் போதும்: 
அதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இருந்து பெற்று, 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், ரேஷன் அரிசியும், 150 நாட்கள் வேலையும் வழங்கினால் போதும். விவசாயிகள் விலை நிர்ணயம் செய்வதற்கு பதில், அவர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் பணம் செலுத்தலாம். இது தான் அரசியல் வாதிகள் கணக்கு. கோவில் நிலங்களை பற்றி பேச தேவையில்லை என்ற நிலைப்பாட்டில், அரசியல் கட்சிகள் உள்ளன. 

'காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைக்காக போராடுவோம். ஆனால், வீணாக கடலில் கலக்கும் மழை நீரை தேக்கவோ, மணல் அள்ளும் மாபியாக்களை தடை செய்யவோ, திட்டம் தீட்ட மாட்டோம். நீர்நிலைகளை துார் வார நிதி ஒதுக்க மாட்டோம்' என்ற நிலையில் தான், அரசியல்வாதிகள் உள்ளனர். படிப்புக்கேற்ற, நிரந்தரமான வேலைக்கு, பென்ஷன் போன்ற பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ஆனால், ஒப்பந்த அடிப்படையில், ஓய்வூதியம் இல்லாத, தற்காலிக வேலை தான் வழங்கப்படுகிறது. 

பெண்கள் : 
பெண்கள், சுக பிரசவத்துக்கு ஆசைப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை வழியாக, குழந்தையை எடுக்கும் முறை அதிகரித்து விட்டது. விவசாயத்தில் உள்ள, சுய உதவிக் குழு பெண்கள், விவசாய நிலம் கேட்கின்றனர். ஆனால், அரசோ, சுழல்நிதி தருகிறது. கிராம பெண்கள், அவர்களுக்கான தொழிற்சாலைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றை கேட்கின்றனர். அரசோ, 'மைக்ரோ கிரெடிட்' என்ற கைச்செலவு தொகையை, கடனாக கொடுக்கிறது. இப்படித்தான், துறைவாரியாக, மக்களின் விருப்பமும், அரசு மற்றும் அரசியல்வாதிகளின் தந்திர செயல்பாடுகளும், ஏட்டிக்கு போட்டியாகவே இருக்கின்றன. எனவே, தங்களின் பிரச்னைகள் மற்றும் விருப்பங்களை, அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து முன்வைத்து பெறும் வலிமை, மன உறுதி, போராட்டத்தை முன்னெடுக்கும் விழிப்புணர்வு, மக்களிடம் அதிகரிக்க வேண்டும். மக்களின் விருப்பங்கள் சார்ந்த, தேர்தல் அறிக்கை தான், உண்மையான ஹீரோவாக இருக்க முடியும். 
 

தலைப்புச்செய்திகள்