Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறுமிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் கோவை! 

அக்டோபர் 26, 2020 05:49

கோவை: தமிழ்நாட்டின் தலைநகருக்கு இணையாகக் கோவை மாநகர் மாறி வரும் அதேவேளையில், சிறுமிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் மாவட்டத்தில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து நிகழும் பாலியல் குற்றச் சம்பவங்கள், சிறுமிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், சிறுமிகளுக்கு வீட்டிலே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி, கோவை கணபதி பகுதியில் 42 வயதாகும் தந்தை, தனது 15 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்தார். சம்பந்தப்பட்டவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் வந்த தந்தை, மகளை சித்திரவதை செய்ததுடன்  பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் அவர் தனது செயல் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது? என மகளை மிரட்டியும் உள்ளார். எனினும் அந்த சிறுமி தந்தை செய்த சித்திரவதை குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஏதோ இது ஒன்று மட்டும் இப்படிப்பட்ட வழக்கு என நாம் ஒரு முடிவுக்கு வாந்துவிட முடியாது. கடந்த ஆண்டு போக்ஸோ பிரிவின் கீழ் கோவையில் மட்டும் 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதே இந்த ஆண்டு 9 மாதத்திற்குள் மட்டும் 52 போக்ஸோ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற வழக்குகள் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தைவிட 2 மடங்கு போக்ஸோ அதிகம்;! கோவை போலீசார் அளித்துள்ள தரவுகள் படி மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் 26 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளது. அதுவே கடந்த ஆண்டு குறிப்பிட்ட 4 மாதத்தில் 11 வழக்குகள் பதிவாகியிருந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சுந்தர் இந்த விவகாரம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்குப் பேட்டி அளித்த போது தெரிவித்ததாவது:
பெரும்பாலும் வயதான முதியவர்களே, 15 வயது முதல் 18 வயதுள்ள சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அதிலும் குடும்பப் பிரச்சினையோடு வாழ்ந்து வரும் சிறுமிகளையே இதுபோன்ற தவறான எண்ணங்களோடு இருப்பவர்கள் அணுகுகிறார்கள். பெரும்பாலும் சிறுமிகள் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுமிகள், தங்களை சித்திரவதை செய்த நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கவும் வெளியே வந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் இந்த குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மக்களிடம் பாலியல் சார்ந்து தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்