Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓட்டலில், வழக்கறிஞர் மீது சரமாரி தாக்குதல்: உரிமையாளர்கள் உட்பட 6 பேர் சிறையிலடைப்பு 

அக்டோபர் 26, 2020 05:58

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓட்டலுக்கு காபி சாப்பிட வந்த வக்கீலை சரமாரியாக தாக்கிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருநெல்வேலியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரம்மா (வயது 43). வியாபாரிகள் மற்றும் சேவை நிறுவனங்களால், நுகர்வோரின் உரிமைகள் பாதிக்கப்படும்போது, அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களுக்காக, நீதிமன்றங்களில் வாதாடி, இழப்பீடு வாங்கிக் கொடுப்பதில், மிகவும் பிரசித்தி   பெற்றவர்.

இந்நிலையில், வழக்கறிஞர் பிரம்மா, பாளையங்கோட்டை, முருகன் குறிச்சியில் உள்ள, ஓட்டல் ஒன்றுக்கு, தமது நண்பர் ஒருவருடன் காபி சாப்பிட சென்றார். அப்போது திடீரென அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் வேலை ஆட்கள் என, மொத்தம் 10 பேர் கூட்டமாக வந்தனர். அவர்கள் வழக்கறிஞர் பிரம்மாவை பார்த்து, " நீ தானே வக்கீல் பிரம்மா. எங்கள் ஓட்டலுக்கு எதிராக நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு போட்டு, எங்களை அபராதம் கட்ட செய்தாய்? என்று கூறிக் கொண்டே, பிரம்மாவின் முகத்தில் பாய்லர் வெந்நீரை ஊற்றினர். 

அத்துடன் நிறுத்தி கொள்ளாமல், அவருடைய நண்பரை, ஓரமாக நிற்கச் சொல்லி விட்டு, பிரம்மாவை சூழ்ந்து கொண்டு, சரமாரியாக தாக்கினர். ஓட்டல் உள்ளவர்களுக்கு தெரியாமல், இந்த சம்பவத்தை  செல்போனில் விசுவலாக எடுத்து பரவ விட்டார். அதனை தற்செயலாக பார்த்த மாநகர காவல் உதவி ஆணையர் ஜான் பிரிட்டோ, காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகிய இருவரும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழக்கறிஞர் பிரம்மாவை மீடடு,  திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சூரிய நாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள் பலர், அந்த ஓட்டலை முற்றுகையிட்டு, வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதுகுறித்து, வழக்கறிஞர் பிரம்மா, பாளையங்கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து, ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரன், மணிசங்கர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் நால்வர் என, மொத்தம் 6 பேரை, பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் பிரம்மாவுக்கு ஆதரவாக, தமிழ்நாடு பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் ஜான் பீட்டர், செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். திருநெல்வேலியில், வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கிய வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள, ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட ஆறு பேரையும் நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
 

தலைப்புச்செய்திகள்