Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராணுவ கேண்டீனில் விற்கப்படும் பொருட்கள்: மத்திய அரசு புதிய உத்தரவு 

அக்டோபர் 26, 2020 08:01

புதுடெல்லி: இந்தியாவில் ராணுவ கேண்டீன்களில் விற்கப்படும் இறக்குமதி பொருட்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 4,000க்கும் மேற்பட்ட கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய ரீடெல் செயினாக விளங்கும் இந்த கேண்டீன்கள் மத்திய அரசின் கேண்டீன் ஸ்டோர்ஸ் துறையால் (CSD) நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 1.2 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த கேண்டீனில் குறைந்த விலைக்கு மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபாட்டில்களும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் தரகர்கள், ராணுவ வீரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்று விடுகின்றனர். இங்கு 10 மதுபாட்டில்கள் வாங்கப்பட்டால் 4 பாட்டில்கள் ராணுவத்தினரின் நண்பர்கள், உறவினர்களுக்கு தான் சென்று சேர்கிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்டவற்றுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்மூலம் பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ள ”ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” என்ற உள்நாட்டுப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் திட்டத்திற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ’ஸ்காட்ச்’ மதுபான வகையும் அடங்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களுக்கு எந்தவித விற்பனைத் தடையும் கிடையாது. இந்திய கேண்டீன்களில் விற்கப்படும் 5,500 பொருட்களில் 420 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
சீனப் பொருட்கள் தான் அதிகம்:

இதில், பெரும்பாலானவை சீனாவில் இருந்து வரும் டாய்லட் ப்ரஷ், எலக்ட்ரிக் கெட்டில், சாண்ட்விச் டோஸ்டர்ஸ், லேப்டாப், லேடீஸ் ஹேண்ட்பேக் உள்ளிட்டவை ஆகும். மத்திய அரசின் நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படுபவை மதுபானங்கள், உயர் தர ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்