Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

'வருங்கால முதலமைச்சர் உதயகுமார்!' ஆர்வமிகுதியில் ஆதரவாளர்கள் கோஷம்

அக்டோபர் 26, 2020 08:16

மதுரை: வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரை அவரது ஆதரவாளர்கள் வருங்கால முதலமைச்சரே என வாழ்த்துக் கோஷம் எழுப்பியது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்றிருந்தார். சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் உள்ளூர் அ.தி.மு.க.வினரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் திடீரென வருங்கால முதலமைச்சர் அண்ணன் உதயகுமார் என முழக்கம் எழுப்பினர்.

இந்தக் கோஷத்தை செவிமடுக்காததைப் போல் இருந்த உதயகுமார் புன்னகை பூத்த முகத்துடன் அங்கிருந்து சற்று நேரத்தில் கிளம்பினார். இதனிடையே இது ஏதேச்சையாக நடைபெற்ற நிகழ்வு என்றும் ஆர்வமிகுதியில் ஆதரவாளர்கள் இதுபோல் முழக்கம் எழுப்புவது வழக்கமான ஒன்று தான் எனவும் திருமங்கலம் அ.தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க.வில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் இப்போது தான் பஞ்சாயத்து முடிந்து நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. அதற்குள் அமைச்சர் உதயகுமாரை முதலமைச்சர் என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டிருப்பது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட மட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது.
 

தலைப்புச்செய்திகள்