Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரசை சைலன்டாக ஓரங்கட்டிய லாலு!

மார்ச் 26, 2019 05:32

பீஹார்: மிக நீண்ட இழுபறிக்குப் பின், பீஹாரில், காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. இந்தத் தொகுதிப் பங்கீட்டில், காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கியதுடன், தனக்கு வேண்டாத தொகுதிகளை தள்ளிவிட்டு, லாலு பிரசாதின், ராஷ்ட்ரீய ஜனதா தளம், 'கில்லி' அடித்து உள்ளது. 

பீஹாரில், 40 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., மற்றும் மத்திய அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வானின், லோக் ஜன சக்தி கூட்டணி அமைந்துள்ளது. கால்நடை தீவன வழக்கில் சிறையில் உள்ள, லாலு பிரசாதின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமாகும். கடந்த, 2009, 2014 தேர்தல்களில், 25 தொகுதிகளில் போட்டியிட்டாலும், இரு தேர்தலிலும், தலா, நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற, பல்வேறு சமுதாய மக்களின் ஓட்டுகளையும் பெற வேண்டும். அதற்காகவே, கூட்டணி அமைப்பதில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தீவிரம் காட்டியது. 

பல குட்டிக் கட்சிகள் இணைந்து கொண்டன. ஆனால், காங்கிரஸ் அதிக தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடித்தது. கூட்டணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்தது. இறுதியில், ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தமாக, 20 தொகுதி களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள, 20 தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிட உள்ளது. உபேந்திர குஷ்வாகாவின், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிக்கு, ஐந்து தொகுதிகள்; முன்னாள் முதல்வர், ஜிதன் ராம் மாஞ்சியின், ஹிந்துஸ்தான் ஆவாமி மோர்ச்சா மற்றும் வி.ஐ.பி., கட்சிக்கு, தலா, மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தேசியக் கட்சியான, காங்கிரசுக்கு, ஒன்பது தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் மற்றக் குட்டிக் கட்சிகளுக்கு, 11 தொகுதிகள் தரப்பட்டு உள்ளன. இதற்கு முக்கிய காரணம், இந்தக் குட்டிக் கட்சிகளுக்கு, ஜாதி அடிப்படையில், ஓட்டு வங்கி உள்ளது. 'காங்கிரஸ் கிட்டத்தட்ட செத்துப் போன கட்சி. அதற்கு, ஒன்பது தொகுதி களே அதிகம். இருந்தாலும், பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன' என, ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்தத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 

தனக்கும் மற்றக் கூட்டணிக் கட்சிகளுக்கும், வெற்றி வாய்ப்பு உள்ள, பிரச்னை இல்லாத தொகுதிகளை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில், சிக்கலான தொகுதிகளை, காங்கிரசுக்கு தள்ளி விட்டது. இந்தக் கூட்டணி ஒப்பந்தம் மூலம், கூட்டணியின் தலைமையை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஏற்று உள்ளது. ஜாதி ஓட்டு உள்ள குட்டிக் கட்சிகளை இழுத்துக் கொண்டு உள்ளது. 

அதனால், மற்ற ஜாதிகளின் ஓட்டுகளும், அதற்கு கிடைக்கும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால், தனது ஓட்டுகளை பிரிக்கலாம் என்பதையும், அதையும் கூட்டணியில் சேர்த்து உள்ளது. அதே நேரத்தில், சிக்கலான தொகுதிகளை ஒதுக்கி, காங்.,கை சைலன்டாக ஓரங்கட்டி உள்ளது. ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க, லாலு முயற்சித்துள்ளார். நடக்குமா... பார்ப்போம்!

தலைப்புச்செய்திகள்