Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுகிறாரா? கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ரஜினிகாந்த் முடிவு 

அக்டோபர் 28, 2020 08:47

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கும் முடிவையே நடிகர் ரஜினிகாந்த் கைவிட இருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கையும் தயாராகிவிட்டது. எந்த நேரத்திலும் வெளியாகக் கூடும்,''  என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலம் என்பதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்தும் ஆண்டுகள் ஓடியதுதான் மிச்சம். அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவதற்கான எந்த சமிக்ஞையுமே இல்லை.

ரஜினிகாந்தைப் பொறுத்தவரை 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலுக்கு வருவார் என்கிற பிம்பத்தை சுமந்து வருகிறார். இதனை சில ஆண்டுகளுக்கு அவரே வெளிப்படையாக அறிவித்தார். ஆனாலும் இந்த அறிவிப்பு கூட கடுமையான நெருக்கடிகளால்தான் வெளியிடப்பட்டது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த கதை. அவ்வப்போது ரஜினிகாந்த் அபூர்வமாக தெரிவித்த கருத்துகள் அனைத்துமே சர்ச்சையாகிப் போனது. ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் அப்படியே கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தாலும் தான் முதல்வராகப் போவதில்லை கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை எனவும் அறிவித்தார். அந்த அறிவிப்பிலேயே ரஜினிகாந்த் ஜகாவாங்கிவிட்டார் என்றே சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் எந்த சூழ்நிலையிலும் வந்துவிடவே கூடாது என்பதில் தி.மு.க. படுதீவிரமாக காய்களை நகர்த்தியது. ஆனால், டெல்லியோ எப்படியாவது ரஜினியை களத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பது? என முடிவோடு இருக்கிறது. ரஜினியை அரசியலுக்கு கொண்டு வந்து 3வது அணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ.க. ஆவலோடு காத்திருந்தது. இதற்காக தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவருடைய விருப்பம். அதே போல் இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 6 மாதமே உள்ள நிலையில் அவர் கட்சி துவங்கி மாவட்ட செயலாளர்களை நியமித்து புத் கமிட்டி அமைப்பது என்பது இயலாத காரியம். அப்படியே கட்சி துவங்கினாலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும். தனித்து போட்டியா? கூட்டணியா? என்பது பற்றியும் முடிவு எடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சி சார்பாக போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதெல்லாம் இயலாத காரியம் என்பது அவருக்கே தெரியும்.

தற்போது தமிழகத்தை கொரோனா எனும் அரக்கன் உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய அபிமானிகளையோ, ரசிகர்களையோ அவர் பலி கொடுக்க விரும்பமாட்டார். அதேபோல் அவர் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு தான் இதுவரை கட்சி துவங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடவில்லை. ரஜினிகாந்த் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றால் லட்சக்கணக்கானோர் ஓட்டு போடுகிறார்களோ? இல்லையோ? அவரை பார்ப்பதற்காக ஒன்று திரள்வார்கள். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை எதிர்பார்க்க முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அவர் அரசியல் பிரவேசத்தில் ஒரு முடிவை எடுக்காமல் தடுமாறி வருகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்