Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொல்.திருமாவளவனுக்கு எதிராக பா.ஜ.க. ஆவேசம்! தமிழகத்தில் தலித் வாக்குகளை பெற தந்திர முயற்சியா?

அக்டோபர் 28, 2020 08:57

சென்னை: வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் ஏன் மனு ஸ்மிருதியை கையில் எடுத்தார்? என்பதற்கான காரணத்தை விட்டு விட்டு சற்றே தேர்தல் நோக்கில் உற்று பார்த்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரரால் பா.ஜ.க.வுக்குத்தான் பெரிய ஆபத்தைக் கொடுக்கக் காத்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வோ தமிழகத்தில் தலித் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று தந்திரமாக மனு ஸ்மிருதி விவகாரத்தை கையிலெடுத்து திருமாவளவனை எதிர்த்து போராட்ட களத்தில் குதித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக திரும்பச் செய்வது. அதன் மூலம் தமிழகம் முழுவதும் தலித் வாக்குகளை மொத்தமாக பா.ஜ.க.வுக்கு எதிராக திருப்புவது. இதுதான் விடுதலை சிறுத்தைகளின் தந்திரமாகும். ரொம்ப சிம்பிளான லாஜிக்தான் இது. ஒரே ஒரு கல்லை அடித்து மொத்தக் குளத்தையும் குழம்ப செய்யும் ரொம்பப் பழசான ஐடியாதான் இது. இந்த யோசனையை யார் கொடுத்தார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இது திருமாவளவனுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணிக்குமே கூட லாபம் பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மனு தர்மத்தை எதிர்த்து காலம், காலமாக பல தலைவர்களும் குரல் கொடுத்தபடிதான் உள்ளனர். அது புதிய விஷயமே இல்லை. ஆனால் திருமாவளவன் வலிமையாக இப்போது குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தீவிரமாக இறங்கி விட்டார். இதுதான் பா.ஜ.க.வினரையும், இந்து அமைப்புகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஆனால், திருமாவளவன் படு தெளிவாகத்தான் பேசியுள்ளார். தன் பக்கம் எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாத அளவுக்குத்தான் தெளிவாக அவரது பேச்சும் உள்ளது. முழுப் பேச்சைக் கேட்டால் அது புரியும்.

ஆனால், இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்றுதான் பலரும் கேட்கின்றனர். ஆனால், அதற்கும் திருமாவளனிடம் நிச்சயம் பதில் இருக்கிறது. இப்போது மட்டும் அவர் பேசவில்லை. காலம், காலமாக அவரும் தான் இதை எதிர்த்துப் பேசி வருகிறார். பா.ஜ.க.தான் இப்போது இதை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அக்கட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு போராட்டமாக மாற்றிக் கொள்கிறது. காரணம், தனது இருப்பை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது..

அதேபோலத்தான் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரு நிர்ப்பந்தம். தேர்தலுக்கு முன் தனது கட்சியின் பலத்தை சோதித்துப் பார்க்கவும், அதை பலப்படுத்திக் கொள்ளவும் திருமாவளவனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அதைத்தான் அந்தக் கட்சியினரும் சரியாக செய்து கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க.வின் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தற்போது திருமாவளவனுக்கு ஆதரவாக பல கட்சிகள் திரண்டு விட்டன. கூடவே தலித் சமுதாயத்தினரும், திருமாவளவனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

நிச்சயம் இது தேர்தலிலும் எதிரொலிக்கும். மனுவைத் தூக்கி பிடிக்கும் பா.ஜ.க.வுக்கு எதிராக தலித் வாக்குகள் திரும்பும். திருமாவளவனுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இது லாபத்தையே கொடுக்கும். அதாவது ஒவ்வொரு வாக்கு வங்கியாக குறி வைத்து தேர்தல் நெருங்கி விட்டதால் பலப்படுத்தும் டெக்னிக்காகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

எந்த வகையில் பார்த்தாலும் இது நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கோ அல்லது திருமாவளவனுக்கோ பின்னடவைக் கொடுக்கக் கூடியதாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக அவர்களது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளவே இது பயன்படும். அதேசமயம், பா.ஜ.க.வுக்கு திருமாவளவன் எதிர்ப்புப் போராட்டங்கள் எந்த அளவுக்கு பலன் தரும் என்றும் தெரியவில்லை. அதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தலைப்புச்செய்திகள்