Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்துக்கு ரத்து 

அக்டோபர் 29, 2020 04:55

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை ரத்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என்று இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், சிறப்பு சர்வதேச விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே முதல் மற்றும் ஜூலை முதல் குறிப்பிட்ட நாடுகளுடன் இருதரப்பு 'வான்வழி சேவை'கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உட்பட சுமார் 18 நாடுகளுடன் இந்தியா வான்வழி சேவைக்கு ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான ஒரு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்களை அந்தந்த நாடுகளிளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் இயக்க முடியும்.

இந்நிலையில் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது நவம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சில நாடுகளை தவிர மற்றநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படாது. அரசு அனுமதித்த வழித்தடங்களில் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் தனது சுற்றறிக்கையில், சர்வதேச அளவில் அனைத்து சரக்கு விமான சேவைகள் மற்றும் சரக்கு சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விமானங்களின் செயல்பாடு பாதிக்கப்படாது என்றும், வழக்கம் போல் சரக்கு விமானங்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், உள்நாட்டு விமான சேவைகள் கடந்த மே 25ம் தேதி முதல் தொடர்ந்து நாடு முழுவதும் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்