Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

அக்டோபர் 29, 2020 05:23

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்றுமுன்தினம் 582 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ரோந்துப்படகுகளில் அப்பகுதிக்கு வந்த இலங்கைக்கற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கி விரட்டியடித்தனர்.

இதில் தங்கச்சிமடத்தைச்சேர்ந்த பூண்டிராஜ் என்பவருக்குச்சொந்தமான டி.என்.10 எம்.எம்.1018 படகில் சென்ற சுரேஷ்,கெபா, ஆரோக்கியராஜ்,  கைடன்,  ஜெர்மான்ஸ், திவாகர், ப்யூர்சன் மேலும் ஒரு மீனவர் என மொத்தம் 8 மீனவர்களில் சுரேஷ் என்ற மீனவரது தலையில் பாட்டில் பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து சக மீனவர்கள் உடனடியாக படகை திருப்பிச்செலுத்தி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். காயமடைந்த சுரேஷிற்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் சிலமாதங்கள் அமைதிகாத்த இலங்கைக் கடற்படையினர் மீண்டும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்