Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

அக்டோபர் 29, 2020 07:20

திருநெல்வேலி: வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளிலேயே, திருநெல்வேலி மாவட்டத்தில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால்    விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடெங்கிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள முதல்நாளான நேற்று, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், முக்கூடல், பாப்பாக்குடி, செங்குளம் மற்றும் கபாலிப்பாறை ஆகிய ஊர்களிலும், அவற்றின் சுற்றுவட்டாரங்களிலும், பிற்பகலில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக, இடைவிடாது பெய்த இந்த கனமழையினால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  கடந்த சில தினங்களாக, இங்கு நிலவிவந்த கடுமையான வெப்பம் தணிந்து, இதமான குளிர்ச்சியும் நிலவியது. நடப்பு பிசான பருவ நெல் சாகுபடிக்கு, இந்த மழை மிகவும் ஏற்றது என்பதால், விவசாயிகள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குளங்கள், கண்மாய்கள், ஆறுகளில் தண்ணீர் ஓடுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கோடை காலங்களில் இம்மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று பொதுமக்கள், விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்