Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி அரசியலுக்கு வருவார்: நம்பிக்கையோடு காத்து இருக்கிறோம்- ரஜினி ரசிகர்கள்

அக்டோபர் 30, 2020 07:18

ரஜினி அரசியல் வருகைக்காக ரசிகர்களும் நிர்வாகிகளும் நம்பிக்கையை இழக்காமல் காத்திருக்கின்றனர். ரஜினி அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்பது 2 மாதங்களில் தெரிந்துவிடும்.

இது பற்றி ரஜினியின் தீவிர ரசிகர்கள் சிலர் கூறியதாவது:-

‘ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது எங்களின் 25 ஆண்டுகால கோரிக்கை. 1996-ல் ரஜினி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோதே பெரிய மாற்றத்தை உருவாக்கி காட்டினோம். எங்களின் கோரிக்கைக்கு ரஜினியும் அவ்வப்போது நேரம் வரட்டும், காலம் கனியட்டும் என்று சொல்லிக்கொண்டே வந்தார். அந்த காலம் என்பது 2017-ம் ஆண்டு தான் கனிந்தது. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவு மற்றும் கருணாநிதி உடல்நலம் குன்றியபோது தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழகத்தில் ரஜினியை விட்டால் வேறு நபர் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாக ரஜினியும் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார்.

பின்னர் வேகம் வேகமாக மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகள் தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பாராளுமன்றம், உள்ளாட்சி ஆகிய 2 தேர்தல்களிலும் ரஜினி நம்முடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று கூறி தடை போட்டார். எனவே சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வந்தோம். நேற்று முன் தினம் கடிதம் வெளியானபோது கூட நம்பவில்லை. ஆனால் நேற்று ரஜினியின் டுவிட் அதிருப்தியாக்கி விட்டது.

ரஜினியின் அருகில் இருக்கும் சிலர் அவரை குழப்புகிறார்கள். தமிழகம் முழுக்க கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் கொரோனாவை மறந்து தீவிர தேர்தல் பணிக்கு தயாராகி விட்டன. அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள் எடுக்கும் சர்வேக்களிலும் ரஜினி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்றே வருகின்றன. இந்நிலையில் ரஜினி பின்வாங்க மாட்டார். இது தனக்கு நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சிகளை சமாளிக்க இப்போதைக்கு வெளியிட்ட அறிவிப்பாகவே பார்க்கிறோம்.

தலைமை நிர்வாகிகளிடம் கேட்டதற்கு விரைவில் மாவட்ட செயலாளர்கள் அனைவரிடமும் வீடியோ காணொலி மூலம் ரஜினி ஆலோசனை நடத்த இருக்கிறார். உங்கள் அனைவரின் எண்ணங்களையும் அறிந்து ஆலோசனை செய்த பிறகே எதுவாக இருந்தாலும் அறிவிப்பார் என்கிறார்கள். எனவே ரஜினி விரைவில் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சட்டமன்ற தேர்தலில் களம் காண்பார். 25 ஆண்டு காலமாக தங்களுடைய நேரத்தையும் பணத்தையும் செலவு செய்த நிர்வாகிகளை கைவிடமாட்டார்.

ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா அளித்துள்ள பேட்டியில் கொரோனாவுக்கு முன், அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார். கொரோனாவால் கட்சியின் பெயர், கொடி, கொள்கை போன்றவற்றை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் எனது தம்பியின் உடல்நலனே முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருப்பது அவசியம். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து இரண்டு மாதங்களில் தெரிய வரும் என கூறியுள்ளார். எனவே நம்பிக்கை இருக்கிறது’. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 

தலைப்புச்செய்திகள்