Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 30, 2020 09:05

கோவை: கோவை அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கண்டித்தும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்துவதாக ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அதில்  தி.மு.க. தொண்டர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெற வலியுறுத்தி நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் வேலுமணி மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டும் கையில் கருப்பு கொடி ஏந்தியும்,  தி.மு.க.வுக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டும் பங்கேற்றனர். இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் தலைமையில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் பேசியதாவது: கோவையில் அமைச்சர் கொண்டுவந்துள்ள பல நல்ல திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க.வினர் அமைச்சர் மீது வீண் பழி சுமத்துகின்றனர். சாதாரணமாக சென்னை வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பம் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் 17வது இடத்தில் இருக்கின்றனர்.

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கைதேர்ந்த தி.மு.க.வினர் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் புகார் கூறுவது வேடிக்கையாக கொண்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோவை மாநகருக்கு எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்பட வில்லை.

ஆனால், அமைச்சர் வேலுமணி அமைச்சராக இருக்கும் இந்த காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கோவை மாநகரில் நடைபெற்ற வருகிறது. இதை கொடுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்புகின்றனர். கோவையில் இந்த முறை அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. கைப்பற்றும். தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் பேசினார்.

தலைப்புச்செய்திகள்