Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக பா.ஜ.க.வில் குஷ்புவுக்கு முக்கிய பதவி? வானதி சீனிவாசனை திருப்திபடுத்திய தலைமை

அக்டோபர் 30, 2020 09:18

சென்னை: தமிழக பா.ஜ.க.வில் குஷ்புவுக்கு முக்கிய பதவி கொடுக்கத்தான்,  பா.ஜ.க. முக்கியத் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தேசிய மகளிரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக தலைவர் பதவி கிடைக்காததால் விரக்தியில் இருந்ததால் அவருக்கு தேசிய அளவில் பதவி கொடுத்துள்ளனர்,''  என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பா.ஜ.க.வின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன். தமிழிசையை போலவே மிக தீவிரமான கட்சிப் பணியை ஆற்றி வருபவர். சிறந்த அறிவாளி. எதையும் நாசூக்காகவும், அதேசமயம் புள்ளி விவர தரவுகளுடனும் மிக பொறுமையாக பேசுவது இவரது சுபாவம். தமிழிசை சவுந்தராஜன் இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, பா.ஜ.க.வின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பரவ செய்தவர். தமிழிசையை போலவே எதிர்க்கட்சிகளின் மீது நாகரீகமான வார்த்தைகளையும், கண்ணியம் மிகுந்த விமர்சனத்தையும் எடுத்துரைப்பவர்.

சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. மேலிடம் தேசிய நிர்வாகிகளை நியமித்து ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த யார் பெயரும் இடம் பெறவில்லை. குறிப்பாக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் வரை யார் பெயருமே அதில் இடம்பெறவில்லை. ஆனால் எப்படியாவது தங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களில் வானதி சீனிவாசனும் ஒருவர். இப்போது தேசிய பொறுப்பு தரப்பட்டுள்ளது.

இதன் பின்னணி என்ன?, காரணம் என்ன? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்திருப்பதாவது: 
வானதி சீனிவாசன் எதிர்பார்த்த பதவியே வேறு. தமிழிசை ஆளுநராக அவர் சென்றபோதே, இவர்தான் அடுத்த மாநில தலைவர் என்று சோஷியல் மீடியாவில் பா.ஜ.க.வினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தெரிந்து நடந்ததா? அல்லது அறியாமல் நடந்ததா? என்று தெரியவில்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தது வானதி சீனிவாசன் தான்.

ஆனால், தேர்தல் நெருங்கும் சமயத்தில், தி.மு.க.வை சமாளிக்கவும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஓட்டுக்களை அள்ளவும் எல்.முருகனை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமித்துவிட்டனர். இதனால் மேலும் அப்செட் ஆனார் வானதி சீனிவாசன். இப்போதுகூட அவரை தேசிய அளவுக்கு மாற்றியிருக்க காரணம் இருக்கலாம். குஷ்புவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வளவு நாள் தலித் பிரமுகரை தலைவராக நியமித்து பா.ஜ.க. மதச்சார்பற்ற கட்சியாக காட்டி கொண்டது. அதுபோலவே சிறுபான்மையினரான குஷ்புவையும் எல்.முருகன் இடத்துக்கு மாற்றம் செய்யலாம்.

தமிழகத்திலேயே வானதி சீனிவாசனுக்கு பொறுப்பு தந்தால், அது சமீபத்தில் கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என்பதால்கூட, தேசிய அளவுக்கு அவரை உயர்த்தி பதவி தந்திருக்கிறார்கள். அண்ணாமலைக்கு சீட் தரும்போது, குஷ்புவை நிச்சயம் பா.ஜ.க. அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாது. இப்போதைக்கு தமிழகம் அறிந்த மிகப் பிரபலமாக இருக்கும் பெண் அரசியல்வாதி குஷ்புதான். அதனால் குஷ்புவுக்கு மாநில அளவிலான முக்கிய பதவி ஒன்று கிடைக்கத்தான் வானதி சீனிவாசனுக்கு இந்த பதவி தந்திருக்கலாம். இப்போதெல்லாம் பா.ஜ.க. எதை செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்