Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டை உடைத்து, 14 பவுன் நகைகள் கொள்ளை: துாத்துக்குடி தலைமைக்காவலர் அதிரடி கைது

நவம்பர் 06, 2020 07:30

திருநெல்வேலி: திருநெல்வேலியில், வீட்டை உடைத்து, 14 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த தலைமைக்காவலர் கற்குவேல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில், கடந்த மாதம் ஒரு வீட்டை உடைத்து, அங்கிருந்த 14 பவுன் தங்க நகைகள், கொள்ளையடித்து செல்லப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து, பெருமாள் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்காக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றி விட்டு,  தூத்துக்குடி ஆயுதப்படைக்கு, இரண்டு வாரங்களுக்கு முன் மாற்றப்பட்ட,  கற்குவேல் (வயது.28) என்பவருக்கு, தொடர்பு இருப்பது தெரியவந்தது. அத்துடன், தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த, நான்கு திருட்டு வழக்குகளிலும், இவர் சம்பந்தப்பட்டு இருப்பதும், தெரியவந்தது. உடனடியாக, திருநெல்வேலி மாநகர போலீசார், கற்குவேலை நேற்றுமுன்தினம்  இரவோடு, இரவாக, தூத்துக்குடி ஆதப்படை குடியிருப்பில் கைது செய்தனர்.

அவரை திருநெல்வேலிக்கு கொண்டு வந்து,  ரகசிய இடத்தில் வைத்து,  தனிப்படை மூலம்,  விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள கற்குவேல், 2015ம் ஆண்டில், போலீஸ் இளைஞர் காவல் படையில், பணியாற்றி வந்தார். பின்னர்,  2017ம் ஆண்டில், போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் மூலம், தேர்வு செய்யப்பட்டவர். இவருடைய சொந்த ஊர் திருச்செந்தூர் ஆகும். திருட்டு, கொள்ளை போன்றவற்றை தடுக்க வேண்டிய போலீஸ்காரரே, அவற்றில் ஈடுபட்டிருப்பது, பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்