Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எத்தனை மோடி வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கணிப்பு

நவம்பர் 06, 2020 08:21

ஈரோடு: எத்தனை மோடி வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது. மனு தர்மநூல் தொடர்பாக பெண்களை இழிபடுத்தி வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது குற்றமல்ல,''  என்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் 1970ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியால் நிறுவப்பட்ட காந்தி சிலையின் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தமிழக முன்னாள் காங். தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது: பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரின் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்ற கருத்து இருக்கிறது. அந்த கருத்து உண்மையாக இருக்குமானால் பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனாலும் சட்டம் அதன் கடமையை செய்யும், அதனை ஏற்றுக் கொள்வோம்.  விவசாயிகள் விளைவித்த பொருளை லாபகரமான விலைக்கு விரும்பிய இடத்தில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேல் யாத்திரை அல்லது குட்டிக்கரணம் போட்டாலும் பாரதிய ஜனதா கட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். திருமாவளவன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது அவர் கூறிய கருத்து 100க்கு 100 உண்மையான கருத்து அதனை எதிர்ப்பவர்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கிறார்கள்.

சட்டத்திற்கு விரோதமாக தி.மு.க.வை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதை எதிர்க்கிறேன் அச்சகத்தின் பெயர், ஒட்டப்பட்டவர்களின் பெயரோ இல்லாமல் இது போன்று ஒட்டப்படுவது தவறானது.  அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டியிடுவதற்கு கூட காரணம் காந்தியடிகள். காந்தியடிகளின் தாக்கம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து கொண்டிருக்கிறது. காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு இந்திரா காந்தி ஆகியோரின் பெயரை மறைக்க வேண்டும் என்ற முயற்சியில் மோடி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். காந்தியைப்போல் நேருவைப் போல் இந்திரா காந்தியைப் போல் பாரதிய ஜனதா கட்சியில் யாரும் இல்லாத காரணத்தினால் காங்கிரசை சேர்ந்த வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களை வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள். காந்தியையும், நேருவையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வளவு பெரிய சிலையை குஜராத்தில் நிறுவியிருக்கிறார்கள்.

காங்கிரஸை எதிர்க்க அவர்களிடம் தலைவர்கள் இல்லை. காங்கிரஸ் தலைவர்களை வைத்தே காழ்ப்புணர்ச்சியுடன் முறியடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இன்றைக்கு நல்ல காரியங்களை செய்வதை விட்டுவிட்டு அவர்களை ஒடுக்குவதற்கும் சிறு வியாபாரிகளை ஒடுக்குவதற்கும் செய்ய வேண்டிய அனைத்தையும் மோடி செய்து கொண்டிருக்கிறார். பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது விவசாயிகளின் வாழ்வு வளம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று மோடி சொல்கிறார். ஆனால் உண்மையில் அவர் விவசாயிகளை நசுக்கி கொண்டிருக்கிறார். விவசாயி தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் பொருளை விற்க முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறார்.

குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்கு லாபம் அடைவதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நாட்டில் மிகப்பெரிய ஆபத்தாக அவர் இருக்கிறார். காஷ்மீரில் ஜனநாயகம் கிடையாது. அங்கு இருக்கும் தலைவர்கள் எல்லோரும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். பேச்சுரிமை இல்லை. யாரும் அதிகமாக பேசக்கூடாது. பத்திரிகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். இதனை நீக்க போராடிக் கொண்டிருக்கின்றோம். கொரனோவால் ஒருபுறமும் மறுபுறம் பொருளாதார பாதிப்பாலும் மக்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நாட்டை காவி மயமாக்க வேண்டும் என முயற்சிக்கிறார்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, ஜெயின், பார்சி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதனை காவி மயமாக்க வேண்டும் சிறுபான்மை மக்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற கொடூரமான மனப்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. 

தலைப்புச்செய்திகள்