Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம்: விவசாயிகளுக்கு அ.தி.மு.க. துரோகம் செய்கிறது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு

நவம்பர் 06, 2020 10:23

சென்னை: விவசாய பெருங்குடி மக்களுக்கு பகலில் 6 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் என்ற அறிவிப்புக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 20 மணி நேரமாவது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலவச மின்சாரம் பகலில் 6 மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு அடுத்த கட்ட துரோகத்தைச் செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த அறிவிப்புக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு முன் நடத்தப்படும் பரிசோதனை ஓட்டமா? அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்குச் செய்துள்ள அடுத்தகட்டத் துரோகம் இது. 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். 

அது இயலவில்லை என்றால் குறைந்தபட்சம் 20 மணி நேரமாவது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகித்திட வேண்டும்.
சட்டமன்றத்தில் ஒரு வாக்குறுதியும், வெளியில் வேறு விதமாகவும் செயல்படும் அ.தி.மு.க. அரசு, விவசாயிகள் விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவதும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் கொடுக்க மறுப்பதும் மிகுந்த வேதனையாக இருக்கிறது. தயவு செய்து விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள். வியர்வை சிந்தும் விவசாயிகள் மனதில் வேலைப் பாய்ச்சாதீர்கள்.

ஏற்கனவே, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்ட உதய் மின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல், "பாவ்லா" காட்டி விட்டு பிறகு ஆதரவளித்துச் செயல்படுத்தியது அ.தி.மு.க. அரசு. இப்போதும் கூட இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணத்துடன் நிறைவேற்றத் துடிக்கும் 2020ம் ஆண்டு மின்சாரச் சட்டத் திருத்தத்திற்கும் மறைமுக ஆதரவு வழங்கி, மத்திய பா.ஜ.க. அரசுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைகோர்த்து நிற்கிறார். இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்