Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.2 கோடிக்கு சீர்வரிசை: மிரண்டு போன மதுரை: ஆடு, பைக், கார், டிராக்டர் என இன்னும் ஏராளம்! 

நவம்பர் 07, 2020 05:14

மதுரை: மதுரையில் முன்னாள் அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் ஒருவர் தனது மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து அனுப்பிய சீர்வரிசை சொந்தபந்தங்கள் என்று திருமணத்திற்கு வந்தவர்கள் வாயடைத்து போனார்கள். மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக சில திருமணச் சீர்வரிசை சார்ந்த புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் படங்களுடன் மதுரை கல்யாணம், சீர்வரிசை தொடர்பான புகைப்படங்கள் பகிரப்பட்டன.

பகிரப்பட்ட படங்களில், ஆடு, கோழி, கார், பைக்குகள், டிராக்டர், மூட்டை மூட்டையாக அரிசி, பாத்திரக் கடை வைக்கும் அளவு பாத்திரங்கள், டிவி, ஃபிரீட்ஜ், குத்துவிளக்கு, ஒரு ஆண்டுக்குத் தேவையான இதர பொருட்கள் எனச் சீர்வரிசை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மகளுக்கு இவ்வளவு சீர்வரிசையா?, கொடுத்தது யார்? என்ற தேடல் இணையத்தில் அதிகரித்தது. இந்த சூழலில் குறிப்பிட்ட சீர்வரிசை தொடர்பான முழுத் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த சீர்வரிசையைக் கொடுத்தவர் அ.தி.மு.க. முன்னாள் சட்டசபை உறுப்பினர் தமிழரசு தான்..

தமிழரசு தனது மகள் கீர்த்தியின் திருமணத்திற்காக, குறிப்பிட்ட புகைப்படங்களில் இடம்பிடித்துள்ள சீர்வரிசையைக் கொடுத்துள்ளார். திருமணம் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்துள்ளது. சீர்வரிசைக்கு மட்டும் தமிழரசு ரூ.2 கோடி செலவழித்துள்ளார். மாப்பிள்ளை பெயர் வெற்றிவேல். கொடி மங்கலத்தைச் சேர்ந்த வி.பி.வைத்தியநாதன் என்பவரின் மகன். மதுரையில் நடத்தப்பட்ட இந்த திருமணம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சீர்வரிசைகள் குறித்து திருமணத்திற்கு சென்றவர்கள் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நிலையில் “மதுரைக்கார பொண்ணுனான சும்மாவா மதுரையின்”, “பாரம்பரியமான பெண் வீட்டு சீதனம்” என மதுரையை சேர்ந்தவர்கள் பதிவிட்டுவருகின்றனர். இருப்பினும் இந்த கொரோனா காலத்தில் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு தனது மகளுக்கு ரூ.2 கோடி அளவுக்கு சீர்வரிசை கொடுத்த சம்பவம் அ.தி.மு.க.வினர் மட்டுமல்லாமல் அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்