Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

180 ஆசிரியர்கள் 10 மாணவர்களுக்கு கொரோனா: ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு

நவம்பர் 07, 2020 05:15

சித்துார்: ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறந்த மூன்று நாள்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பர் 2ம் தேதி ஆந்திராவில் திறக்கப்பட்டன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்றாலும் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 180 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதை மாவட்ட கல்வி அலுவலர் (சித்தூர்) நரசிம்ம ரெட்டி உறுதிப்படுத்தினார். இதையும் மீறி, அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகின்றன என்றார். "தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சோதனை கடந்த புதன்கிழமை தொடங்கியது," என்று அவர் கூறினார். எனவே, தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன நிலையில் உள்ளனர்? என்பது ஒரு சில நாள்களில் தெரிந்துவிடும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும்பாலும் ஸ்ரீகலஹஸ்தி, திருப்பதி, மதனப்பள்ளி, சித்தூர், புங்கனூர், பலமனெர், ராமசமுத்திரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் பாதிப்பு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சமமாக உணரப்படுகிறது. தகவல்களின்படி, மாணவர்களின் வருகை தனியார் பள்ளிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும், அரசு பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாகவும் உள்ளது. 

இந்த எண்ணிக்கை கிராமப்புறங்களில் சற்று அதிகமாக உள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஸ்ரீகலஹஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியர், மூன்று ஊழியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. தமிழ்நாட்டில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதனால் வரும் 9ம் தேதி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் அரசு முடிவை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் ஆந்திராவில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்