Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடனை கட்ட வங்கி நிர்வாகம் நெருக்கடி: கார் ஓட்டுனர் துாக்கிட்டு தற்கொலை

நவம்பர் 08, 2020 06:11

தேனி: கொரோனா ஊரடங்கு காரணமாக கடனை திருப்பி செலுத்தமுடியாத கார் ஓட்டுநர் வங்கி ஊழியர்கள் தந்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தேனி அருகே உள்ள அல்லிநகரம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). இவரது மனைவி பவுன் தாய், இவர்களுக்கு ரேணுகா தேவி, ரம்யா, என்ற 3 மகள்கள் உள்ளனர். கார் ஓட்டுநரான முருகன் கடந்த ஆண்டு HDFC  வங்கியில் ரூ.9 லட்சம் கார் கடன் பெற்றுள்ளார்.

முறையாக கடனை செலுத்தி வந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருவாய் இன்றி 6 மாதங்களாக வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக HDFC வங்கி ஊழியர்கள் கடனை கட்டச்சொல்லி தொடர்ந்து நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகன், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் செல்லும் வழியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முருகன் தற்கொலைக்கு முன் தனது மகள் ரம்யாவிடம், வங்கி ஊழியர்கள் தந்த நெருக்கடியால் தற்கொலை செய்யப்போவதாக செல்போனில் கூறியது மட்டுமல்லாமல் தான் பேசுவதை பதிவு செய்து வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட முருகன் உறவினர்கள், முருகனை தற்கொலைக்கு தூண்டிய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி தேனி HDFC வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன்களை கேட்டு நெருக்கடி தரக்கூடாது என நீதி மன்றம் அறிவுறுத்தி இருந்தும், தொடர்ந்து நெருக்கடி தந்து டிரைவர் முருகன் தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். வங்கி முன் நடைபெற்ற முற்றுகை போராட்டாத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தலைப்புச்செய்திகள்