Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளிக்கு முன்பே ராக்கெட் ஏவியுள்ளோம்: இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்! 

நவம்பர் 08, 2020 09:09

ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நேற்றுமுன்தினம் பி.எஸ்.எல்.வி. சி.49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தீபாவளிக்கு முன்பே ராக்கெட்டை ஏவியுள்ளோம்,''  என்று இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பி.எஸ்.எல்.வி. ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி வருகிறது.

அந்தவகையில் பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவற்றுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 49 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு இருந்தது. இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இதில், லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

கொரோனா பரவல் காரணமாக ராக்கெட் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி.49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்ததாவது:

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு அனைத்து செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் கடுமையாக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள் தீபாவளி பண்டிகை வரப்போகிறது அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியிருக்கிறோம். இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்