Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பர்கூர் மலைப்பகுதியில் டாட்டா சுமோ கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி: 11 பேர் காயம்

நவம்பர் 09, 2020 05:06

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் டாட்டா சுமோவில் சென்று கொண்டிருந்த 15 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதையறிந்த எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் அந்தியூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் உள்ள தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் டாடா சுமோ வாகனத்தில் அந்தியூர் அருகேயுள்ள வட்டக்காடு என்ற இடத்திலுள்ள விவசாய தோட்டத்திற்கு கரும்பு நடவு செய்யும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

வாகனத்தை தம்புரெட்டியைச் சேர்ந்த மாதேவன் (வயது42) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மணியாச்சி பள்ளம் அருகில் ஒன்னகரைமேட்டில் வாகனம் வந்து கொண்டிருந்த போது, திடீரென பிரேக் செயலிழந்தது.  இதனால் மலை ஏற்றத்தில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக இறக்கத்தில் பின்னால் சென்றுள்ளது. சிறிது தூரம் வேகமாக பின்னால் வந்த வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த தம்புரெட்டியைச் சேர்ந்த தேவராஜ்(45), சிக்கணன் (45), தொட்டப்பி (45), ஜோகன் (35) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் மாதேவன், ஜோகி 45,  ஜவராயன் 50, போலன் 45, சித்தலிங்கம் 45, ஜோகி 40, மாதேவன் 38, மாதையன் 22, சித்தலிங்கம் 27, கம்பாலன் 30, பசுவராஜ் 27, ஆகிய 11 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்து மக்களின் உதவியுடன் காயமடைந்த 11 பேரை உடனடியாக மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

விபத்தில் இறந்த 4 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், ஓட்டுநர் மாதேவன் உட்பட இருவர் சேலம் அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் அந்தியூர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

தலைப்புச்செய்திகள்