Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கியில் மக்கள் போட்ட பணம், பெரும் பணக்காரர்களுக்கு தரப்பட்டது - ராகுல்காந்தி

நவம்பர் 09, 2020 05:44

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை ‘துரோக தினம்’ என்று காங்கிரஸ் கட்சி அனுசரித்தது. மேலும், ‘பணமதிப்பு நீக்க பேரழிவுக்கு எதிராக பேசுங்கள்’ என்ற ஆன்லைன் பிரசாரத்தையும் தொடங்கியது.

இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:- வங்காளதேசத்தின் பொருளாதாரம், இந்திய பொருளாதாரத்தை விஞ்சி விட்டது. ஒரு காலத்தில், உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்திய பொருளாதாரம் இருந்தது. கொரோனாதான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று மத்திய அரசு சொல்கிறது.

கொரோனாதான் காரணம் என்றால், வங்காளதேசத்திலும் கொரோனா இருக்கிறது. உலகின் பெரும்பகுதிகளிலும் கொரோனா இருக்கிறது. எனவே, கொரோனா காரணம் அல்ல. பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி.யும்தான் காரணங்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற பெயரில், 4 ஆண்டுகளுக்கு முன்பு, பொருளாதாரத்தின் மீது பிரதமர் மோடி தாக்குதலை தொடங்கினார். விவசாயிகள், தொழிலாளர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் ஆகியோரை துன்புறுத்தினார்.

பொருளாதாரம் 2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று மன்மோகன்சிங் கூறினார். அதுதான் நடந்தது. இது, கருப்பு பணத்துக்கு எதிரான போர் என்று பிரதமர் சொன்னார். ஆனால் அது பொய். இது, உங்கள் (மக்கள்) மீது நடத்தப்பட்ட போர். உங்களிடம் இருக்கும் பணத்தை வாங்கி, தன்னுடைய நண்பர்களான இரண்டு, மூன்று பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்க அவர் விரும்பினார். நீங்கள் வங்கி வாசலில் வரிசையில் நின்றீர்கள். ஆனால், பெரும் பணக்காரர்கள் நிற்கவில்லை.

நீங்கள், வங்கிக்கணக்கில் பணத்தை போட்டீர்கள். பிரதமர் அதை எடுத்து தன்னுடைய பணக்கார நண்பர்களுக்கு கொடுத்தார். அவர்களின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். இந்தியாவின் பெருமைக்குரிய பொருளாதாரத்தை மோடி அழித்துவிட்டார். எனவே, இந்தியாவை நாம் கூட்டாக மீண்டும் கட்டமைக்க வேண்டும்.

அடுத்தது, தவறான ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திய நடவடிக்கை. இதனால், சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் அழிக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. பெயரில், தன்னுடைய பணக்கார நண்பர்களுக்கு பிரதமர் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். தற்போது, வேளாண் சட்டங்கள் என்ற பெயரில், விவசாயிகள் குறி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டங்கள், விவசாயிகளை சீரழித்து விடும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்