Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரச்சார வாகனங்களுக்கு குவியும் ஆர்டர்கள்! வேலைக்கு ஆளில்லாமல் தவிக்கும் கோயாஸ்

நவம்பர் 09, 2020 07:24

கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவையில் உள்ள பிரபல வாகன உட்கட்டமைப்பு கோயாஸ் நிறுவனத்திற்கு அரசியல் பிரமுகர்கள் தரப்பில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரச்சார வாகன உட்கட்டமைப்பு பணிகளுக்கு ஆள்பற்றாகுறையால் எடுத்த ஆர்டர்களை செய்து முடிப்பதற்கு திணறி வருகிறது அந்நிறுவனம். கொரோனா ஊரடங்கில் ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் கோவை திரும்ப அடம்பிடிப்பதே இந்த சிக்கலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கோவையில் இயங்கி வரும் கோயாஸ் நிறுவனமானது இந்திய அளவில் வாகன உள்கட்டமைப்பு பணிகளுக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கோவை கோயாஸ் நிறுவனத்தில் இருந்து பிரச்சார வாகனங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நட்சத்திர விடுதியின் சொகுசு அறையில் என்னவெல்லாம் வசதிகள் இருக்குமோ அவை அனைத்தும் ஒரு டெம்போ டிராவலருக்குள் கொண்டு வரப்படும்.

தலைவர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் சாலை வழியாக பயணித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் அவர்களுக்கான ஓய்வுக்கு பிரச்சார வாகனத்தில் சோஃபா பொருத்தப்படும். நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள வசதியாக தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், டாய்லெட், என சகல வசதிகளையும் கோவையில் இயங்கி வரும் கோயாஸ் நிறுவனம் செய்துகொடுக்கிறது. இதன் காரணமாகவே இந்த நிறுவனத்திற்கு ஆர்டர்கள் குவிகின்றன.

இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஒரு சில முக்கிய அரசியல் பிரமுகர்களும், தங்களுக்கு சீட் உறுதி என்பதை அறிந்துகொண்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட இருப்பவர்களும் இப்போதே கோயாஸ் நிறுவனத்திற்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். குறைந்தது பிரச்சார வாகன வடிவமைப்புக்கு இரண்டில் இருந்து மூன்று மாதங்கள் ஆகக்கூடும் என்பதால் இப்போதே ஆர்டர் கொடுத்தால் தான் மார்ச் மாதமாவது வாகனம் கையில் கிடைக்கும்.

இதனிடையே கொரோனா ஊரடங்கில் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் கடந்த 4 மாதங்களாக சும்மா இருப்பானேன் ஏன்? என அவர்களது சொந்த ஊர்களிலேயே சொந்தமாக பட்டறை தொடங்கியிருக்கிறார்கள். உள்ளூர்களிலேயே அவர்களக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்க, இனிமேலும் ஏன் ஊதியத்திற்கு செல்ல வேண்டும்? என மீண்டும் நிறுவனத்றுக்கு திரும்ப மறுக்கிறார்கள். இதனால் தேர்தல் வரையுமாவது வந்துவிட்டு போகுமாறு பழைய டெக்னீசியன்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது கோயாஸ் நிறுவனம்.
 

தலைப்புச்செய்திகள்