Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி பக்தர்கள் வசதிக்காக மின்சார பேருந்துகள் இயக்க முடிவு

நவம்பர் 09, 2020 07:30

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலை மலைப்பாதையில், மின்சார பேருந்துகளை இயக்க தேவஸ்தான நிர்வாகம் சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமலையில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, மின்சார பேருந்து இயக்க, தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதற்காக, ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம், திருமலைக்கு இயக்கப்படும் டீசல் பேருந்துகளை, மின்சார பேருந்துகளாக மாற்றி பயன்படுத்த திட்டமிட்டது. இதன்படி, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம், போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆறு மாதத்துக்கு முன், சில பழைய பேருந்துகளை ஒப்படைத்தனர். அதில் ஒரு பேருந்து, திருப்பதிக்கு சமீபத்தில் வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக, மலைப்பாதையில், இந்த மின்சார பேருந்தை இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பேருந்தில், டீசல் டேங்கிற்கு பதிலாக, மின் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு மணி நேரம், சார்ஜ் ஏற்றப்பட்டால், 160 கி.மீ. பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், விரைவில் மலைப்பாதையில், இந்த பேருந்துகளை அதிகளவில் இயக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்