Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள பாதிரியாரின் நிறுவனங்களில் சோதனை: வருமான வரித்துறையிடம் சிக்கியது ரூ.14 கோடி

நவம்பர் 10, 2020 04:49

புதுடெல்லி: கேரள பாதிரியாரின் நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவின் திருவல்லாவை மையமாக கொண்டு இயங்கி வரும் கிறிஸ்தவ சபை ஒன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை அமைத்து பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. இந்த சபையின் பாதிரியார், ஏழைகளுக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெற்று சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்திருப்பதாகவும், ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இந்த பாதிரியாரின் நிறுவனங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான 66 இடங்களில் கடந்த 5ம் தேதி சோதனை நடந்தது. இவ்வாறு 2 முறை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் நாட்டின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், கேரளாவில் ஒரு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை என பல நிறுவனங்களை நடத்தி வருகிறது. மேலும் 30 அறக்கட்டளைகளையும் இயக்கி வருகிறது. இதில் பல அறக்கட்டளைகள் போலி என கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்