Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்கள், பெற்றோர்களை முதல்-அமைச்சர் குழப்புகிறார்- பாஜக

நவம்பர் 10, 2020 05:45

புதுச்சேரி: புதுவை மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் நாராயணசாமி தனக்கு இல்லாத அதிகாரத்தை வைத்துக் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். நமது மாநிலம் 3 மாநில கல்வி வாரியத்தை சார்ந்துள்ளது. அதனை கூட அறிந்து கொள்ளாமல் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் எந்த விதமான ஆணையமோ, நீதிபதி குழுவோ அமைக்காமல் வெறும் அமைச்சரவையை கூட்டி 10 சதவீத இடஒதுக்கீடு கேட்டுள்ளார்.

கவர்னரை விட முழு அதிகாரம் உள்ள தமிழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் போது, அதை விட புதுவையில் 10 சதவீதம் கேட்பது மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த இடஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அரசியல் நாடகம் நடத்துகிறார். உள்ஒதுக்கீடு விவகாரத்தில், இது ஒரு கொள்கை முடிவு என்பதால் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் இது போன்று பிரச்சினை ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதற்காக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இதனை புரிந்து கொள்ளாமல் அவர் கவர்னரை குறைகூறி வருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்றுத் தருவோம் என்று கூறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி இதுவரை அதை பெறவில்லை. மத்திய அரசு இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த பிறகும் அதனை பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்மையிலேயே மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும். இல்லையென்றால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாததற்காக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்