Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளா காப்புக்காடு முகாமில் யானைக் குட்டிக்கு பிறந்த நாள்

நவம்பர் 10, 2020 10:34

திருவனந்தபுரம்: கேரளா காப்புக்காடு முகாமில் குட்டியானையின் பிறந்த நாளை பலரும் கூடி கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். மனிதர்களைப் போலவே விலங்குகள் நலனிலும் நாம் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் புத்துணர்ச்சி முகாம்கள் மூலம் யானைகள் அவ்வப்போது உற்சாகப்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கேரள மாநிலம் கப்புக்காடு என்ற இடத்தில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் அமைந்துள்ளது. 

இங்கு ஆண்டுதோறும் ஏராளமான யானைகள் அழைத்து வரப்படுவது வழக்கம். அங்கேயே தங்கி வாழக்கூடிய யானைகளும் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு கரும்பு, வெல்லம், அன்னாசிப்பழம் உள்ளிட்டவை உணவாக அளிக்கப்படுகின்றன. இவற்றைக் காண சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கப்புக்காடு முகாமிலுள்ள ஸ்ரீகுட்டி என்ற யானைக்கு கடந்த 8ம் தேதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது இது யானையின் உண்மையான பிறந்த நாள் அல்ல. தென்மலையில் இருந்து கடந்த ஆண்டு இந்த கப்புக்காடு மையத்திற்கு அழைத்து வரப்பட்டதன் முதலாமாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனையே பிறந்த நாளாக வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தனது பெற்றோரை இழந்து வனப்பகுதியில் ஸ்ரீகுட்டி யானை தவித்துள்ளது. இதையடுத்து வனப்பகுதிக்குள் அதன் பெற்றோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கப்புக்காடு முகாமிற்கு அழைத்து வரப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீகுட்டி யானையின் பிறந்த நாளை ஒட்டி பெரிய கேக் ஒன்றை வாங்கி வந்துள்ளனர். அதில் ”ஹேப்பி பர்த்டே ஸ்ரீகுட்டி”  என்று எழுதி குட்டி யானையின் முன்பு கொண்டு வந்து வைத்துள்ளனர். அப்போது தனது தும்பிக்கையால் கேக்கை எடுத்து சாப்பிட்டுள்ளது. இது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதில், வனத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் தான் யானையின் சார்பாக கேக்கை வெட்டினார். பின்னர் அனைவருக்கும் கேக் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 

தலைப்புச்செய்திகள்