Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடிக்கு கொரோனா பாதிப்பு வரவில்லை: எப்படி பாதுகாப்பாக இருக்கிறார் தெரியுமா? 

நவம்பர் 10, 2020 10:46

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு மத்திய அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு வந்த நிலையில், பிரதமர் மோடி எப்படி தன்னத தற்காத்துக் கொள்கிறார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒட்டுமொத்த உலகின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து செல்வது நமது வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. சளி, காய்ச்சல் என்றால் அதற்குரிய சிகிச்சை பெறாமல், கொரோனா இருக்கிறதா? என்று தான் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் மீதான அச்சம் நீடித்து வரும் நிலையில், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருப்பது அவசியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முதல் விளிம்பு நிலை மக்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என பலரும் வைரஸ் பாதிப்பிற்கு பலியானதைக் காண முடிகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இவர் எப்படி தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்? என்று தெரிந்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். தனது 7 லோக் கல்யான் மார்க் இல்லத்தில் தான் வசித்து வருகிறார். 
கொரோனா தொற்று காலத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து

கொண்டார். பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். இவற்றில் மிகவும் தீவிர சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தார். தற்போது பிரதமர் இல்லத்தில் இருந்து பெரும்பாலும் வெளியே வராமல் இருக்கிறார். அவரின் உடல்நிலையை மருத்துவக் குழு ஒன்று தீவிரமாக கவனித்து வருகிறது. இவர்கள் நிலையான வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுகின்றனர். இந்த சூழலில் மோடியை பாதுகாக்க பிரதமர் அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

* பிரதமர் மோடி அதிகாரிகள், அமைச்சர்களை நேரடியாக சந்திப்பதைக் குறைத்துக் கொண்டார். ஒருவேளை முக்கிய அரசு வேலையாக யாராவது சந்திக்க விரும்பினால் அதற்கு முன் அனுமதி வாங்க வேண்டும். பிரதமரை சந்திப்பதற்கு முந்தைய 24 மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொரோனா நெகடிவ் வந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

* பிரதமரை நேரடியாக சந்திக்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் உடல் வெப்பநிலை முதலில் பரிசோதிக்கப்படும். சானிடைசர் அளிக்கப்படும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பிரதமர் மோடியிடம் இருந்து 20 அடி தூரம் தள்ளி அமர்ந்து தான் பேச அனுமதிக்கப்படுகின்றனர்.

* வீடியோ கான்பரன்சிங் மூலம் தான் பெரும்பாலான கூட்டங்கள் நடைபெறுகின்றன. முக்கியமான மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் மட்டும் நேரடியாக சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் கூட ஆன்லைனிற்கு மாறிவிட்டது. பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூட மிக முக்கிய தேவை என்றால் மட்டும் தான் நேரில் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

* சமீப காலமாக ஏராளமான கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார். இந்த எண்ணிக்கை கொரோனாவிற்கு முன்பிருந்ததை விட, பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் எல்லாமே வீடியோ கான்பரன்சிங் பேச்சு தான்.

* தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இருந்து பேட்டி எடுக்க வந்தால், சம்பந்தப்பட்ட குழுவினர் முதலில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்கள் அலுவலகத்திற்கு கூட அவர்கள் செல்ல பிரதமர் அலுவலகம் அனுமதிப்பதில்லை. பேட்டி முடிந்த பின்னர் தான் வெளியே வர முடியும். இவ்வளவு கட்டுப்பாடுகளை பிரதமர் மோடி கடைபிடிப்பதால் இன்று வரை இந்தியாவையே உலுக்கியுள்ள கொரோனா பிரதமர் மோடியிடம் நெருங்கவில்லை.

தலைப்புச்செய்திகள்