Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹைகோர்ட் சொல்லியும் பா.ஜ.க. வேல் யாத்திரை: அரசு மீது எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் அதிருப்தி

நவம்பர் 10, 2020 10:49

சென்னை: தமிழகத்தில் நீதிமன்ற அனுமதியே வாங்காமல், அரசின் தடையையும் மீறி கொரோனா காலத்தில் பா.ஜ.க. யாத்திரை செல்வது சரியா? என்ற வாதம் பரவலாக எழுந்து வருகிறது. இதை தமிழக அரசு தடுக்காமல் இருப்பது ஏன்? என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் நவம்பர் 6ம்தேதி தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று தமிழக பா.ஃ.க. தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இப்படி ஒரு அறிவிப்பு வெளியானபோதே, அதற்கு மாநில அரசு அனுமதி வழங்குமா? என்ற எதிர்பார்ப்பும் சந்தேகமும் எழுந்தது.

அதன்படியே, கொரோனா காரணம் காட்டப்பட்டு மறுக்கப்படவும் நீதிமன்றத்துக்கு பா.ஜ.க. தரப்பினர் சென்றனர். அங்கும் கொரோனா காலம் என்பதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் முதல்கட்டமாக திருத்தணியில் ஸ்வாமி தரிசனம் செய்ய போகிறேன் என்று தெரிவித்து விட்டு சென்ற எல்.முருகன் தடையை மீறி வேல் யாத்திரை சென்றனர். எல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைதும் ஆயினர்.

இதற்கு பிறகு மறுபடியும் யாத்திரைக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவும், யாத்திரை சம்பந்தமாக முழு விவரத்தை நீதிமன்றம் கேட்டிருந்தது. அதனால், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ளதால், எந்த நடவடிக்கையும் நீதிமன்றத்தை மீறி எடுக்க முடியாது. ஆனால், எத்தனை தடைகள் வந்தாலும் இந்த வேல் யாத்திரை வெற்றிபெறும் என்று அறிவித்து, அதன்படியே திருவொற்றியூரில் மீண்டும் வேல் யாத்திரை நடந்தது. இதுதான் சர்ச்சையாகி வருகிறது. மாநில அரசையும் மீறி,  நீதிமன்ற அனுமதியையும் முழுமையாக பெறாமல் எப்படி பா.ஜ.க. யாத்திரை நடத்துகிறது? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இந்த யாத்திரையில் ஏராளமானோர் திரண்டு செல்வதால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பரவாத நோய் தொற்று, இந்த வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா? என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒருபக்கம் கேள்வி எழுப்புகிறார்.. எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தே வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது என்றும் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், இந்த வேல்யாத்திரையால் வட சென்னை பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் வாகன நெரிசலில் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வண்டியும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், பா.ஜ.க. தலைவர்களை வரவேற்கும் விதமாக, ராட்சத நாட்டு வெடிகளை தடையை மீறி, 2.5 அடி உயரத்துக்கு வெடித்ததால், பயங்கர சத்தம் எழுந்தது. இதனால், சுற்றுவட்டார 
குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

இதைதவிர, தாரை தப்பட்டை முழங்க, பெண்கள் குத்தாட்டம் போட்டு கொண்டு போனது, பலரரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது. தடையை மீறி தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் திருத்தணியில் கைது செய்யப்பட்ட நிலையில் திருவொற்றியூரில் மீண்டும் வேல் யாத்திரை நடத்தி கைதாகியுள்ளார். ஒருவர் ஒருமுறை தடையை மீறி மீண்டும் அதே தவறை செய்யும் போது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்