Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோஷ்டி பூசல், ஜாதி அரசியல்: திணறும் வட சென்னை தி.மு.க

மார்ச் 26, 2019 10:00

வட சென்னை: வட சென்னை லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் வீராசாமியின் மகன், டாக்டர் கலாநிதி நிறுத்தப்பட்டுள்ளார். இடைத்தேர்தல் நடக்கஉள்ள, பெரம்பூர் சட்டசபை தொகுதி வேட்பாளராக, ஆர்.டி.சேகர் களமிறக்கப்பட்டுள்ளார்.இந்தப் பகுதியை பொறுத்தவரை, ஆதிதிராவிடர் சமூகத்தினர், அதிகளவில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, வன்னியர், முதலியார், மீனவர், நாடார், நாயுடு சமூகத்தினர் பரவலாக வசிக்கின்றனர். 

வடசென்னை மாவட்ட செயலராக உள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இவர், தன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, கட்சியில் முக்கியத்துவம் அளிப்பதாக புகார் உள்ளது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒப்பந்ததாரருக்கு, 'பேக்கேஜ்' முறையில் வழங்கி, சமீபத்தில், சர்ச்சைக்கு ஆளானார். 

தன் சமுதாயத்தை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மூர்த்தியுடன் நெருக்கமாக இருந்து, பல்வேறு காரியங்களை, அவர் சாதித்து வருகிறார். இதன் வாயிலாக கிடைக்கும் நிதியை, கட்சியின் தலைமைக்கு, அவர் செலவிட்டு வருகிறார்.இவரது செயல்பாடுகளால், மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள், மீனவர்கள், முதலியார், நாடார் சமூகத்தினர், கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு, தொகுதியில் நிலவும் ஜாதி அரசியலும், ஒரு காரணம் என்ற கருத்து உள்ளது. இது தெரிந்தும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இந்நிலையில், வடசென்னை லோக்சபா தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஜாதி அரசியல் வெளிப்படையாக வெடிக்க துவங்கியுள்ளது. மாவட்டத்தில், சுதர்சனம், எம்.எல்.ஏ., சாமி உள்ளிட்டோர், தனித்தனியாக பிரிந்து, அரசியல் செய்ய துவங்கியுள்ளனர்.இதனால், வேட்பாளர்கள் கலாநிதி மற்றும் சேகருக்கு, கட்சியினரின் முழு ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. சமீபத்தில், வடசென்னையில், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து,ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதிலும், கோஷ்டி பூசல் வெடித்தது. ஒருவழியாக வேட்பாளர்கள், கலாநிதி, சேகர் ஆகியோர் நிலைமையை சமாளித்தனர். 

இத்தகவல் எட்டியதால், அ.தி.மு.க., - அ.ம.மு.க., வேட்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். லோக்சபா தேர்தலில், எதிர் கூட்டணியில், தே.மு.தி.க., போட்டியிடுவதால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, கலாநிதி கணக்கு போட்டார்.தற்போது, கோஷ்டி பூசலால், வெற்றிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில், இரு வேட்பாளர்களுமே உள்ளனர். இப்பிரச்னையை, ஸ்டாலின் மருமகன் கவனத்திற்கு, இருவரும் கொண்டு சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்