Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

நவம்பர் 16, 2020 05:41

புதுடெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி, ராணுவ செய்தி தொடர்பு அதிகாரி பாபர் இப்திகார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் குரேஷி கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்திய உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  அவை பாகிஸ்தானிய எல்லை பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத ஊக்குவிப்புக்காக நிலம் பயன்பட இந்தியா அனுமதிக்கிறது. அண்டை நாடுகளில் இருந்து தாக்குதல்களை நடத்த இந்தியா திட்டமிட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார். தெற்காசிய பகுதியில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி பேசி வந்த நிலையில், பாகிஸ்தானிய அதிகாரிகள் இந்தியா மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அதிரடியாக முன் வைத்துள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் எதிரியாக உள்ள இந்தியாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளுக்கு எங்களிடம் மலையளவு சான்றுகளும் உள்ளன என பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சான்றுகளை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைப்போம். சர்வதேச தலையீடு இன்றி தெற்காசியாவில் அமைதிக்கான உத்தரவாதம் ஏற்படுவது கடினம் என்றும் குரேஷி தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி கிடைக்க இந்தியா உதவியது என்ற குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் நாட்டின் நம்பிக்கையற்ற முயற்சி இது. பாகிஸ்தானின் தந்திரங்களை சர்வதேச சமூகம் நன்கு அறியும். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாடே நிதியுதவி வழங்கியது. இவை அனைத்தும் பாகிஸ்தானால் ஜோடிக்கப்பட்டவை. கற்பனையில் உருவானவை என்றும் கூறினார். 

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்