Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.ஜி.ஆர். நகரில் டி.வி. நடிகர் ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை

நவம்பர் 16, 2020 06:09

போரூர்: சென்னை, எம்.ஜி.ஆர். நகர் வள்ளல் பாரி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் செல்வ ரத்தினம் (வயது 41). டி.வி. நாடக நடிகர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பி.ஏ.’ தொடரில் தற்போது நடித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 6.45 மணி அளவில் ஆட்டோவில் 4 பேர் கும்பல் செல்வரத்தினம் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த செல்வரத்தினத்தை வெட்ட முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வரத்தினம் அவர்களிடம் இருந்து தப்பிக்க சாலை வழியாக ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கொலைவெறி கும்பல் ஓட, ஓட விரட்டி செல்வரத்தினத்தை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, முகம் இடது கையில் பலத்த வெட்டு காயம் அடைந்த செல்வரத்தினம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வெறி கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்ததும் அசோக் நகர் உதவி கமி‌ஷனர் பிராங்க் ரூபன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். செல்வரத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம்? கொலையாளிகள் யார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைவைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட செல்வரத்தினத்தின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் டேம் காலனி அகதிகள் முகாம் ஆகும். இலங்கை தமிழரான இவர் டி.வி. தொடரில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? அவருடன் கடைசியாக பேசியவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்