Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்: எல்.முருகன்

நவம்பர் 17, 2020 05:23

கோவை: பாரதீய ஜனதா கட்சியில் பல்வேறு தொழில் துறையினர் இணையும் நிகழ்ச்சி கோவை பீளமேடு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்றுமாலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதாவில் தொழில்முனைவோர் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து வருகிறார்கள். இதற்கு பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சி தான் காரணம். தொழில்துறையை சேர்ந்த 120 பேர் கோவையில் இன்று (நேற்று) பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இது பா.ஜனதா கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டுகிறது.

ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை போல பல அதிகாரிகள் பா.ஜனதாவில் இணைய தயாராக இருக்கின்றனர். வேல்யாத்திரை நாளை (இன்று) திட்டமிட்டபடி தர்மபுரியில் தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி கோவையில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரி சதானந்த கவுடா பங்கேற்க உள்ளார். 23-ந் தேதி பழனியில் நடைபெறும் யாத்திரையில் முரளிதரராவ் கலந்து கொள்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 21-ந் தேதி தமிழகம் வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அமித்ஷா யாரை எல்லாம் சந்திக்கிறார் என்ற தகவல் தற்போது இல்லை. ஆனால் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அமித்ஷா வருகை பா.ஜனதா தொண்டர்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும். அமித்ஷா சென்ற இடங்களில் எல்லாம் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. அது எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கிறது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். வேல்யாத்திரை குறித்து அ.தி.மு.க.வின் கட்சி நாளிதழில் என்ன எழுதப்பட்டுள்ளது? அதற்கு எங்கள் கட்சி நிர்வாகி என்ன சொன்னார் என்பது குறித்து முழுமையாக அறிந்த பிறகே கருத்து சொல்ல முடியும். வருகிற சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை, நாடாளுமன்ற குழு முடிவு செய்யும்.

கந்த சஷ்டி கவசம் மற்றும் முருகப் பெருமானை இழிவுபடுத்தியதை யாருமே விரும்ப வில்லை. எனவே மனம் புண்பட்ட பக்தர்களை ஆறுதல் படுத்தவும், மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லவும், தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கவும் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. வேல்யாத்திரை குறித்த வழக்கில் நீதிமன்றம் சொன்னது குறித்து இங்கு பேசுவது சரியானதாக இருக்காது. தமிழகத்தில் தி.மு.க.வினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கவர்னர் மாளிகையை முற்றுகையிடுகிறார்கள். ஆனால் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. பயங்கரவாதிகளை கையாள்வதில் சில வழக்குகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட வில்லை. அது குறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து சொல்லி இருப்பார்கள். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அதிகாரத்தில் தலையிட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். எந்த குற்றச்சாட்டும் இல்லாத நேரத்தில் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. துணைவேந்தரை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு பணிகளை செய்தார். சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை அவர் சந்திப்பார். இதில் பா.ஜனதா கருத்து சொல்ல ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜனதா மாநில துணைத் தலைவர்கள் அண்ணாமலை, பேராசிரியர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் ஆர்.நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்