Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிழல் உலக தாதா ரவி பூஜாரி மும்பை போலீசாரிடம் ஒப்படைப்பு

நவம்பர் 19, 2020 05:06

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர், நிழல் உலக தாதா ரவி பூஜாரி. இவர் மீது பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் வெளிநாடுகளில் ரவி பூஜாரி தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2019) செனகல் நாட்டில் வைத்து ரவி பூஜாரியை கர்நாடக போலீசார் கைது செய்தார்கள். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அவர் மீது பதிவான வழக்குகள் அனைத்தையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு பின்பு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ரவி பூஜாரி அடைக்கப்பட்டார். அதே நேரத்தில் ரவி பூஜாரி மீது பதிவான 3 வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பெங்களூருவை போன்று ரவி பூஜாரி மீது மும்பையிலும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் சகோதரரும், கட்டுமான அதிபருமான ராஜு பட்டீலை கொலை செய்ய முயற்சி நடந்திருந்தது. இந்த வழக்கில் 4 பேரை மும்பை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேரும் ரவி பூஜாரியின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. மேலும் ரவி பூஜாரியின் உத்தரவின் பேரிலேயே கட்டுமான அதிபர் ராஜு பட்டீலை, கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இந்த வழக்கில் பெங்களூருவில் சிறைவாசம் அனுபவிக்கும் ரவி பூஜாரியிடம் விசாரிக்க மும்பை போலீசார் முடிவு செய்தார்கள்.

இதற்காக பெங்களூருவுக்கு வந்த மும்பை போலீசார், கட்டுமான அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் ரவி பூஜாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு, 10 நாட்கள் ரவி பூஜாரியை மும்பை போலீசார் வசம் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மும்பை போலீசாரிடம் ரவி பூஜாரி ஒப்படைக்கப்பட்டார். அவரை மும்பைக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைப்புச்செய்திகள்