Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்: விரைவில் வெளியே கொண்டுவர வழக்கறிஞர்கள் தீவிரம்

நவம்பர் 19, 2020 05:42

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கைவிசாரித்த பெங்களூரு சிறப்புநீதிமன்றம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியே 1 லட்சம் அபராதமும், சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, ‘‘வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை தண்டிக்க முடியாது. அவரிடம் இருந்து ரூ.100 கோடியே 1 லட்சம் அபராதமும் வசூலிக்க முடியாது. சசிகலா உள்ளிட்ட மூவரும் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிப்பதுடன், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்''என உத்தரவிட்டது. இதையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சரணடைந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சசிகலாவின் விடுதலை தேதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பரில் கேள்வி எழுப்பினார். அதற்கு சிறையின் கண்காணிப்பாளர் லதா, ‘‘சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அவர் அபராதத்தை செலுத்த தவறினால் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது'' என பதில் அளித்தார். இதையடுத்து சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. மேலும் அவரை விடுதலை செய்வதற்கான தடையில்லா சான்றையும் நீதிமன்றம் வழங்கியது. இதைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தும் பணியை தொடங்கினர்.

நேற்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி கே.சிவராமா முன்னிலையில் ஆஜராகி ரூ.10 கோடியே 10 ஆயிரத்துக்கான 4 வங்கி வரைவோலைகளை சமர்ப்பித்தார். அப்போது நீதிபதி அபராதம் செலுத்தியவர்களின் விவரம், அதற்கான வருமான ஆதாரம், உச்சநீதிமன்ற தீர்ப் பின்படி சொத்துக்களை ஏன் ஏலம் விடவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘‘சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் தம்பி பழனிவேலு ரூ.3.25 கோடி, அவரது மனைவி வசந்தி தேவி ரூ. 3.75 கோடி, மருத்துவர் வெங்கடேஷின் மனைவி ஹேமா ரூ.3 கோடி, இளவரசியின் மகன் ரூ. 10 ஆயிரம் என மொத்தமாக ரூ. 10 கோடியே 10 ஆயிரம் பெற்று இந்த அபராத தொகைக்காக வரைவோலை 2 வங்கிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கான வருமான ஆதாரமும், முறையான வரிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

சொத்துக்களை ஏலம் விட்டு, அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதா மரணத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. மேல்முறையீட்டின்போது அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் தற்போதைய கரோனா சூழலில் சொத்துக்களை ரிசர்வ் வங்கி ஏலம் விட்டு, பணத்தை வசூலிப்பதற்கு எவ் வளவு காலம் ஆகும் என தெரியவில்லை. அதே வேளையில் சசிகலா உள்ளிட்டோர் 4 ஆண்டு தண்டனையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். அவர்களது விடுதலைக்கு சட்டப்பூர்வமாக எந்தசிக்கலும் வரக்கூடாது என்பதற் காக அபராதத் தொகையை செலுத்துகிறோம்'' என தெரி வித்தார்.

இதை ஏற்ற நீதிபதி கே.சிவராமா, சசிகலா அபராதம் செலுத்தியதற்கான ஒப்புதலையும், அவரை விடுதலை செய்ய தடையில்லை என்பதற்கான சான்றையும் வழங்கினார். இதை பெற்றவுடன் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று தாக்கல் செய்தார். அப்போது சசிகலா இந்த 4 ஆண்டுகளில் 17 நாட்கள் மட்டுமே பரோலில் வெளியே வந்துள்ளார். தண்டனை காலத்துடன் அவர் சிறையில் இருந்த அரசு விடுமுறை நாட்களை கழித்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரியதாக தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்