Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜன.5 முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் ஸ்டாலின் தொடங்குவார்: கே.என்.நேரு தகவல்

நவம்பர் 20, 2020 06:30

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தை ஜன.5-ம் தேதி முதல் தொடங்குகிறார். 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் பிரச்சாரம் தொடங்குகிறது என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை, அன்பகத்தில் இன்று (நவ. 20) அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் ஜனவரி 5-ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். 15 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர் நிகழ்வுகளையும் நடத்தி சுமார் 10 லட்சம் மக்களைச் சந்திக்கும் பயணமாக இந்தப் பயணம் அமையும்.

இந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு என்னென்ன செய்யத் தவறியிருக்கிறது, என்ன காரியங்களைத் தவறாகச் செய்திருக்கிறார்கள், திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள், எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதை இந்தப் பயணங்களில் எடுத்துச் சொல்வோம். பாஜக அரசின் திட்டங்களுக்கு இசைவு தந்து, மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து, சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட இந்த ஆட்சியைக் கலைக்கும் விதத்தில் இந்தப் பிரச்சாரப் பயணம் அமையும்.

இந்தப் பிரச்சாரம் 75 நாட்கள் நடைபெறும். 15 தலைவர்கள் பங்குபெறுவார்கள். முதலாவதாக இன்று கருணாநிதி பிறந்த திருக்குவளையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். 29-ம் தேதியிலிருந்து மக்களவை உறுப்பினர் கனிமொழி சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். கொள்கை பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் 30-ம் தேதிக்குள்ளாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்குவார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக மக்களைத் தொடர்புகொண்டு வருகிறார். கோவிட் தொற்று தாக்கம் குறைந்த பின்னர், ஜனவரி தொடங்கியதும், தலைவர் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். கடந்த முறை மிகக்குறைந்த தொகுதிகளில் தோல்வியைத் தழுவியதால் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தோம். அதனால் முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்குகிறோம். மக்களுக்கு ஒரு தெளிவான திட்டத்தைப் பிரச்சாரத்தின் மூலம் எடுத்துச் செல்வோம்". இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்