Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நவ. 23 முதல் சிறப்பு மின் ரயில்களில் பெண்களுக்கு அனுமதி

நவம்பர் 22, 2020 07:10

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் அத்தியாவசிய பணியாளர்களுக்கான சிறப்பு மின்சார ரயில்களில் வரும் 23-ம் தேதி முதல் அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான பயணிகள் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே ஊழியர்கள், வங்கிகள், காப்பீடு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகார கடிதம் மற்றும் அலுவலக அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதிகம் பேர் இதில் பயணிப்பதால், மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மொத்தம் 244 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த சிறப்பு ரயில்களில் வரும் 23-ம் தேதி முதல் அலுவலக நேரம் (காலை 7 -10, மாலை 4.30 - இரவு 7.30) தவிர மற்ற நேரங்களில் பெண் பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

 அதே நேரத்தில் 12 வயதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்த்து, மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டுமென தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்