Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொய்யான பாலியல் புகாரில் கைது: பி.டெக் பட்டதாரிக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்: பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 22, 2020 07:14

பொய்யான பாலியல் புகாரில் கைதான பி.டெக் பட்டதாரிக்கு எதிராக புகார் அளித்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரூ. 15 லட்சம் நஷ்டஈடு வழங்க சென்னை கூடுதல் பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிடெக் பட்டதாரியான சந்தோஷ் என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்த நிலையில் நிலத் தகராறு காரணமாக இரு குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் திருமணம் நின்று போனது. 

இந்நிலையில் வேறு இடத்துக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்த சந்தோஷ், தனது மகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து விட்டதாக அந்த பெண்ணின் தாயார் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தோஷ் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் சந்தோஷூக்கு 95 நாட்கள் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே புகார் அளித்த அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் சந்தோஷ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என உறுதியானதால் அவர் கடந்த 2016-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து தன் மீது பொய்யாக புகார் அளித்த பெண்ணிடம் ரூ. 30 லட்சம் நஷ்டஈடு கோரி சந்தோஷ் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பொய் புகார் காரணமாக கைது செய்யப்பட்டதால் படிப்பை பாதியில் கைவிட்டதாகவும், வழக்கு செலவுக்காக ரூ. 2 லட்சம் வரை செலவு செய்திருப்பதாகவும், இதனால் தனது ஓட்டுநர் உரிமம் கூட மறுக்கப்பட்டு விட்டதாகவும், பொறியாளராக இருக்க வேண்டிய தான் தற்போது அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும், தானும், தனது குடும்பமும் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொய்யான புகாரில் கைதான சந்தோஷூக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கும், பாதிப்புக்கும் அவர் மீது பொய் புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தினர் ரூ. 15 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்