Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

24 மணி நேரத்தில் நிவர் புயல்... பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்

நவம்பர் 23, 2020 07:37

சென்னை: தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் நகர்வை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கலாம் என்றும், அப்போது கடலோர மாவட்டங்களில் கடுமையான காற்றும், கடல் பகுதியில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயல் காரணமாக அதிக சேதம் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்களைச் சேர்ந்த 120 வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.  இவர்கள் கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும் கடலோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். சேதம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டால், அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பார்கள். 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால் 26-ந்தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்